உத்தரபிரதேசம்: உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் நரேந்திர மோடி 1.5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இது கடந்த 2019-ம் ஆண்டு அவர் வென்ற வாக்குவித்தியாசத்தை விட குறைவு என்பது கவனிக்கத்தக்கது.
நாடு முழுவதும் பதிவான மக்களவைத் தேர்தல் வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இந்த வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் உத்தரப் பிரதேசம் வாரணாசியில் போட்டியிட்ட பிரதமர் நரேந்திர மோடி பின்தங்கியிருந்தார். அவரை எதிர்த்து வாரணாசியில் களம் கண்ட, அஜய் ராய் முன்னிலையில் இருந்தார்.
அடுத்தடுத்தச் சுற்றுகளில் பிரதமர் மோடி, காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராயை விட கூடுதல் வாக்குகள் பெற்று முன்னிலைப் பெற்றார். இதையடுத்து வாரணாசி தொகுதியின் வாக்கு எண்ணிக்கை தற்போது நிறைவடைந்துள்ளது.
அதன்படி, பிரதமர் மோடி 612970 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் 460457 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இருவருக்குமான வாக்கு வித்தியாசம் 1 லட்சத்து 52 ஆயிரத்து 513. இதை தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
முன்னதாக கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் 4.79 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.