புவனேஸ்வர்: ஒடிசாவில் மக்களவைத் தேர்தலுடன் இணைந்து சட்டப்பேரவைக்கும் 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பாஜக மற்றும் பிஜு ஜனதா தளம் (பிஜேடி) ஆகிய கட்சிகளுக்கு இடையேதான் நேரடி போட்டி நிலவியது. 24 ஆண்டுகளாக ஒடிசா முதல்வராக இருந்த நவீன் பட்நாயக் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், ஆறாவது முறையாக ஆட்சியைப் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
சிக்கிம் முன்னாள் முதல்வர் பவன் குமார் சாம்லிங்கின் சாதனையை முறியடித்து, இந்தியாவின் நீண்ட காலம் முதல்வராக இருந்தவர் என்ற பெருமையை அவர் பெறுவார் என அவரது ஆதரவாளர்கள் கூறி வந்தனர். கடந்த 2019-ல் நடைபெற்ற ஒடிசா சட்டப் பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 147 இடங்களில் 112 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பலத்துடன் நவீன் பட்நாயக்கின் பிஜேடி ஆட்சி அமைத்தது.
பாஜக 23 இடங்களிலும், காங்கிரஸ் 9 இடங்களிலும் வெற்றி பெற்றன. ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலுக்காக பாஜக தலைவர்கள் அதிக அளவில் குவிந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
ஆளுங்கட்சி மீது ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்து பிரச்சாரம் செய்யத் தொடங்கிய பாஜக தலைவர்கள், முதல்வர் நவீன் பட்நாயக்கின் வலதுகரம் என்றும், அரசியல் வாரிசு என்றும் கூறப்படும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.கே.பாண்டியனைக் குறிவைத்து, `ஒடிசாவை தமிழர் ஆள விடக்கூடாது’ என்று வலியுறுத்தினர். ஐஏஎஸ் அதிகாரியான வி.கே.பாண்டியன் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பிஜு ஜனதா தளக் கட்சியில் இணைந்து செயல்பட்டு வருகிறார்.
அதே நேரத்தில், வி.கே.பாண்டியன் தனது அரசியல் வாரிசு அல்ல என்று வெளிப்படையாக தெரிவித்த நவீன் பட்நாயக், தன்னுடைய உடல்நலம் குறித்து 10 ஆண்டுகளாக பாஜக வதந்தி பரப்பி வருவதாக குற்றம்சாட்டினார். இந்நிலையில், நேற்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் பாஜக தொடர்ந்து முன்னிலை பெற்று வந்தது.
பல இடங்களில் பிஜு ஜனதா தளக் கட்சி வேட்பாளர்களை விட பாஜக வேட்பாளர்கள் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றனர். ஆட்சி அமைக்க 74 இடங்களில் வெற்றி பெற்றால் போதும் என்ற நிலையில் பாஜக 78 இடங்களைக் கைப்பற்றி முதன்முறையாக ஒடிசாவில் ஆட்சி அமைக்கிறது. பாஜகவுக்கு அடுத்தபடியாக ஆளும் பிஜு ஜனதா தளம் 51 இடங்களைப் பிடித்தது. மேலும் காங்கிரஸ் கட்சியானது 14 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்தையும், சுயேச்சை வேட்பாளர்கள் 3 இடங்களையும் கைப்பற்றியுள்ளனர். இதையடுத்து ஒடிசா மாநிலத்தில் பாஜக முதன்முறையாக ஆட்சியைப் பிடிக்கவுள்ளது. இதை ஒடிசா மாநில பாஜகவினர் விழாவாகக் கொண்டாடி வருகின்றனர்.
விரைவில் ஒடிசா பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தி முதல்வரைத் தேர்வு செய்வர் என்று தெரிகிறது. இந்நிலையில் 24 ஆண்டுகள் தொடர்ந்து முதல்வராக இருந்த நவீன் பட்நாயக் விரைவில் தனது பதவியை ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.