கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோதிமணி, அ.தி.மு.க-வில் தங்கவேல், பா.ஜ.க சார்பில் வி.வி.செந்தில்நாதன், நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் கருப்பையா ஆகியோர் களம் கண்டனர்.
இந்த தொகுதியில், கரூர் வருவாய் மாவட்டத்தில் உள்ள கரூர், கிருஷ்ணராயபுரம் (தனி), அரவக்குறிச்சி, திண்டுக்கல் வருவாய் மாவட்டத்தில் உள்ள வேடச்சந்தூர், திருச்சி வருவாய் மாவட்டத்தில் உள்ள மணப்பாறை, புதுக்கோட்டை வருவாய் மாவட்டத்தில் உள்ள விராலிமலை ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அப்போதைய அ.தி.மு.க வேட்பாளர் தம்பிதுரையைவிட நான்கு லட்சத்துக்கும் அதிகான வாக்குகள் அதிகம் பெற்று, அமர்க்களமாக வெற்றிப்பெற்று முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினரான ஜோதிமணி, இந்தமுறையும் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட தங்கவேலை பின்னுக்குத் தள்ளி இரண்டாவது முறையாக வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறார்.
மேற்கண்ட நான்கு வேட்பாளர்களும் தொகுதியில் அதிகம் உள்ள கொங்கு வெள்ளாளர் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அதனால், சமூக வாக்குகள் யாருக்கும் முன்னிலையையோ, பின்னடவையையோ ஏற்படுத்தவில்லை. தி.மு.க கூட்டணியில் காங்கிரஸூக்கு ஒதுக்கப்பட்டாலும், வேட்பாளர் யார் என்று அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது. அதன்பிறகு, ஜோதிமணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும், தொகுதியில் அவருக்கு எதிர்ப்பு இருப்பதாக தகவல் பரவியது. அதோடு, செந்தில் பாலாஜி தரப்பு வேட்பாளர் அறிமுக கூட்டத்திலேயே மொத்தமாக ‘பாய்காட்’ செய்ய, ஜோதிமணிக்கு பின்னடைவாக மாறியது.
இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அ.தி.மு.க வேட்பாளர் தங்கவேலுவும், பா.ஜ.க வேட்பாளர் வி.வி.செந்தில்நாதனும், ‘கடந்த ஐந்து வருடங்களாக எம்.பி-யாக இருந்த ஜோதிமணி, தொகுதிக்காக எதையும் செய்யவில்லை’ என்று மேற்கொண்ட பிரசாரம், ஆரம்பத்தில் ஜோதிமணிக்கு எதிராக மாறியது.
இதனால், ஜோதிமணிக்கும், அ.தி.மு.க வேட்பாளர் தங்கவேலுக்கும் ‘டஃப் ஃபைட்’ ஏற்பட்டது. ஆனால், ஜோதிமணி தனது பிரசாரத்தில், ‘எனக்கு அம்மா, அப்பா, கணவர், குடும்பம் என்று எதுவும் இல்லை. நீங்கள் தான் என் குடும்பம். உங்களுக்காக உழைப்பேன்’ என்று கண்ணீர் சிந்தியபடி ‘சென்டிமென்டாக’ பேசியது, மக்கள் மனதை உருக வைத்தது. மேலும், `சிறையிலுள்ள செந்தில் பாலாஜியை நன்றி அறிவிப்புக்குள் அழைத்து வருவேன்!’ என ஜோதிமணி பாசம் காட்டினார்.
அதோடு, செந்தில் பாலாஜி தரப்பு ஜோதிமணியை புறக்கணிப்பதை தி.மு.க தலைமை கண்டிக்க, அதன்பிறகு செந்தில் பாலாஜி தரப்பு காட்டிய நாலுகால் பாய்ச்சல் பிரசார வியூகம், வாக்காளர்களிடம் காட்டிய ‘தாராளமயம்’ எல்லாம் சேர, கடைசி நேரத்தில் ஜோதிமணிக்கு தொகுதி சாதகமாக மாறியது.
ஆரம்பத்தில் ‘தொகுதி இழுபறியாக இருந்ததை அ.தி.மு.க வேட்பாளர் தரப்பு பயன்படுத்திக்கொள்ள தவறிவிட்டது. இன்னும் கொஞ்சம் முயற்சி செய்திருந்தால், அ.தி.மு.க வேட்பாளர் வென்றிருக்க கூடும்’ என்று தி.மு.க தரப்பிலேயே பேசும் அளவுக்கு தான் களம் இருந்தது. ஆரம்பத்தில் ஜோதிமணிக்கு எதிராக சமூகவலைதளங்களில் தொகுதியில் எதிர்ப்பு இருப்பதாக ‘ட்ரெண்ட்’ செய்யப்பட்டாலும், தனிப்பட்ட முறையில் அவர்மீது எந்த சர்ச்சையும் இல்லாதது, முடிந்தவரை தொகுதிக்கு தனது தொகுதி நிதியில் இருந்து திட்டங்களை நிறைவேற்றியது உள்ளிட்ட விசயங்களும் ‘கை’கொடுக்க, அவர் தொடர்ந்து இரண்டாவது முறையாக வென்றிருக்கிறார்.
இதனால், அ.தி.மு.க தங்கவேல் இரண்டாம் இடமும், இந்த தொகுதியில் பெரிதாக பா.ஜ.க-வுக்கு கட்டமைப்பு இல்லாததால், அந்தக் கட்சி வேட்பாளர் வி.வி.செந்தில்நாதன் மூன்றாம் இடமும் வந்திருக்கிறார்கள். தவிர, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மருத்துவர் கருப்பையா நான்காம் இடம் பெற்றுள்ளார்.
பெற்ற வாக்குகள்:
காங்கிரஸ் வேட்பாளர் (திமுக கூட்டணி) ஜோதிமணி : 5,31,829
அ.தி.மு.க வேட்பாளர் தங்கவேல் : 3,66,209
பா.ஜ.க வேட்பாளர் வி.வி.செந்தில்நாதன் : 1,01,517
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மருத்துவர் கருப்பையா : 86,962
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88