சென்னை: சென்னையில் உள்ள 3 மக்களவைத் தொகுதிகளிலும் சேர்த்து 40,024 வாக்குகள் நோட்டாவுக்கு செலுத்தப்பட்டுள்ளன. 1,512 தபால் வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக தென் சென்னையில் நோட்டாவுக்கு அதிக வாக்குகள் பதிவாகி இருப்பதுடன், செல்லாத தபால் வாக்குகளும் அங்கு தான் அதிகமாக பதிவாகியிருக்கிறது.
சென்னை மாவட்டத்தில் உள்ள வட சென்னை மக்களவை தொகுதியில் 14,96,224 வாக்காளர்கள், தென் சென்னையில் 20,23,133 வாக்காளர்கள், மத்திய சென்னையில் 13,50,161 வாக்காளர்கள் என 48,69,518 வாக்காளர்கள் உள்ளனர். இந்த 3 தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். வட சென்னை தொகுதியில் 9,02,753 வாக்குகள் பதிவாயின. இதில் 13,208 வாக்குகள் நோட்டாவில் செலுத்தப்பட்டுள்ளன. முதியோர், மாற்றுத்திறனாளிகள், ராணுவ வீரர்கள், தேர்தல் பணியில் ஈடுபட்டவர்கள் அளித்த தபால் வாக்குகளில் 264 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன.
மத்திய சென்னையில் 7,31,119 வாக்குகள் பதிவாயின. இதில் 11,163 வாக்குகள் நோட்டாவில் செலுத்தப்பட்டுள்ளன. 564 தபால் வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. தென் சென்னையில் 11,00,006 வாக்குகள் பதிவாயின. இதில் 15,653 வாக்குகள் நோட்டாவில் செலுத்தப்பட்டுள்ளன. 684 தபால் வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன.
மொத்தத்தில் இந்த 3 தொகுதிகளிலும் சேர்த்து 40,024 வாக்குகள் நோட்டாவுக்கு செலுத்தப் பட்டுள்ளன. 1,512 தபால் வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக தென் சென்னையில் நோட்டாவுக்கு அதிக வாக்குகள் பதிவாகி இருப்பதுடன், செல்லாத தபால் வாக்குகளும் அங்கு தான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.