தென்காசி: தென்காசி தொகுதியில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஏழாவது முறையாக தோல்வியை தழுவியுள்ளார்.
தென்காசி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளராக டாக்டர் ராணி ஸ்ரீகுமார், அதிமுக வேட்பாளராக புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, பாஜக வேட்பாளராக தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக இசை மதிவாணன் உட்பட 15 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இன்று காலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் முன்னிலையில் இருந்தார். வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் 4,25,679 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்துள்ளார்.
அதிமுக வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி 2,29,480 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். பாஜக வேட்பாளர் ஜான்பாண்டியன் 2,08,825 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தையும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இசை மதிவாணன் 1,30,335 வாக்குகள் பெற்று நான்காவது இடத்தையும் பிடித்தனர்.
திமுக சார்பில் முதல் முறையாக போட்டியிட்ட டாக்டர் ராணி ஸ்ரீகுமார் 2 கட்சிகளின் தலைவர்களை விட கூடுதல் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். தென்காசி தொகுதியில் தொடர்ந்து 7-வது முறையாக போட்டியிட்ட டாக்டர் கிருஷ்ணசாமி 1,96,199 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி உள்ளார்.