தேனி மக்களவைத் தொகுதி பெரியகுளம் (தனி) தொகுதி, ஆண்டிபட்டி, போடி, கம்பம் மற்றும் மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி, சோழவந்தான் (தனி) ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கியது. ஆண்டிபட்டி தொகுதியில் அ.தி.மு.க முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போட்டியிட்டு வென்றதாலும், போடி தொகுதியில் ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட்டு வென்றதாலும், டி.டி.வி.தினகரன் முதல் முறை போட்டியிட்டு எம்.பி., ஆக தேர்வாகிய தொகுதி என்பதாலும் நட்சத்திர அந்தஸ்த்து பெற்ற தொகுதியாக தேனி உள்ளது.
கடந்த எம்.பி தேர்தலின் போது 40-ல் 39 தொகுதிகளில் திமுக கூட்டணி வென்றபோதும், தேனி தொகுதியில் மட்டும் அதிமுக வேட்பாளரும் ஓ.பன்னீர்செல்வத்தின் மூத்த மகனுமான ரவீந்திரநாத் வென்றார். இதனால் இந்த முறை திமுக நேரடியாக களமிறங்கி வென்றே தீர வேண்டும் என முனைப்பு காட்டியது. தி.மு.க சார்பில் தங்க தமிழ்ச்செல்வன், அ.தி.மு.க நாராயணசாமி, பா.ஜ.க கூட்டணியில் அ.ம.மு.க டிடிவி தினகரன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மதன் ஆகியோர் போட்டியிட்டனர்.
இதில் டிடிவி தினகரனின் தளபதியாக இருந்து, தேனி எம்.பி தொகுதியில் ஏற்கெனவே போட்டியிட்ட தங்கத்தமிழ்ச்செல்வன், இம்முறை குருவையே எதிர்த்து போட்டியிட்டார். இதனால் தேனி தொகுதி எல்லோராலும் கவனிக்கப்படும் தொகுதியாக மாறியது. டிடிவி தினகரனுக்கும், தங்கத்தமிழ்செல்வனுக்கும் நேரடி போட்டியாக களம் இருந்தது.
`அதிமுக, அமமுகவில் இருந்து வந்து, திமுக உட்கட்சி பிரச்னைகளுக்கு காரணமானவர். மூத்த நிர்வாகிகள் உள்ளிட்ட கட்சியினரிடையே இணக்கமாக இல்லாமல் தன்னிச்சையாக செயல்படுகிறார். செல்லும் இடங்களில் வாய் துடுக்காக பேசி மாட்டிக்கொள்கிறார்கள்’ என புகார்கள் வரிசை கட்டி வாசிக்கப்பட்டது தங்க தமிழ்ச்செல்வன் மீது. இருந்தபோதிலும் திமுக வாக்குகள் அனைத்தும் மாறாமல் அப்படியே தங்கத்தமிழ்ச்செல்வனுக்கு கிடைத்துவிட்டது. அதுமட்டுமில்லாது 2 லட்சத்திற்கும் அதிகமான சிறுபான்மையினர் வாக்குகள், பட்டியலின மக்களின் வாக்குகள் மொத்தமாக திமுக அறுவடை செய்திருக்கிறது. கட்சி பிழவு காரணமாக அ.தி.மு.க வாக்குகள் நாராயணசாமிக்கும், டிடிவி தினகரனுக்கும் பிரிந்தது திமுகவுக்கு சாதமாகிவிட்டது.
ஏற்கெனவே எம்.பி-யாக இருந்த டிடிவி தினகரனுக்கு தேனி தொகுதி மிகவும் பரிட்சயமானது. பிரசாரத்திற்கு செல்கையில் அவருக்கு பெரும் வரவேற்பு இருந்தது. இதனால் அந்த ஆதரவு அனைத்து வாக்குகளாக மாறும் என டிடிவி நம்பினார். ஆனால் தற்போது டிடிவி தினகரன் நேரடியாக போட்டியிடுவதால் கூட்டணி கட்சிகளின் வாக்குகளுடன், தான் சார்ந்த முக்குலத்தோர் சமுதாய வாக்குகளும், பெரும்பாலான அ.தி.மு.க வாக்குகளும் கிடைக்கும் என நம்பினார். அவர் எதிர்பார்த்ததை போல அந்த வாக்குகள் முழுமையாக டிடிவிக்கு கிடைக்கவில்லை. பா.ஜ.க கூட்டணியில் இருப்பதால் சிறுபான்மையினர், பட்டியலின சமூக வாக்குகளை பெற முடியவில்லை. கிராமங்களில் டிடிவி தினகரனின் குக்கர் சின்னமும் பெரிய அளவில் சென்றடையாததும் அவருக்கு வாக்குகள் குறைய காரணமானது.
அ.தி.மு.க சார்பில் போட்டியிட தேனி முன்னாள் எம்.பி-க்கள் ஜக்கையன், பார்த்திபன் ஆகியோர் கூட போட்டியிட விருப்பம் தெரிவிக்கவில்லை. இதனால் கடந்த காலங்களில் பலமுறை எம்.எல்.ஏ., எம்.பி., சீட் கேட்டு நிராகரிக்கப்பட்ட நாராயணசாமியை பிடித்து போட்டியிட வைத்தனர். இரட்டை இலை சின்னத்தையும் அவர் சார்ந்த நாயக்கர் சமுதாய வாக்குகளை நம்பி களம் இறங்கினார். வேட்பாளர் 40 ஆண்டுகளாக கட்சியில் இருந்தும் மாவட்டத்தில் அறியப்படாத நபராக இருந்தது அதிமுக வேட்பாளருக்கு பின்னடைவானது. இதனால் 3 ஆவது இடத்துக்கு அதிமுக தள்ளப்பட்டது.
நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மருத்துவர் மதன் பிரசாரம் செய்தாரா இல்லையா என்றே தெரியவில்லை. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வந்தபோதும், அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலர் வந்தபோது மட்டுமே பரப்புரையில் ஈடுபட்டார். ஆனால் நாம் தமிழர் கட்சி தம்பிகள் தெரு தெருவாக களத்தில் இறங்கி வேலை பார்த்தனர். இதனால் கடந்த தேர்தல்களை விட இம்முறை கூடுதலான வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றிருக்கிறது.
தங்த தமிழ்ச்செல்வன் 2,78,825 வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தேனியில் தினகரன் கடும் போட்டி அளிப்பார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. அவரின் மனைவியும் பிரசார களத்தில் தீவிரம் காட்டி கவனம் ஈர்த்தார். எனினும் பெரிய வித்தியாசத்தில் தினகரன் தோல்வியை தழுவி இருக்கிறார்.
தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட 25 வேட்பாளர்களில் திமுக, அமமுக தவிர 18 சுயேட்சைகள் உள்பட 23 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.
பெற்ற வாக்குகள்
திமுக – 5,71,493
பாஜக கூட்டணி அமமுக – 2,92,668
அதிமுக – 1,55,587
நாம் தமிழர் – 76,834
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88