புவனேஸ்வர்: 24 ஆண்டுகால ஆட்சி குறித்து நாம் வெட்கப்பட எதுவும் இல்லை என பிஜேடி எம்எல்ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் முன் நவீன் பட்நாயக் உருக்கமாக தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தலோடு சேர்த்து ஒடிசா சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், மொத்தமுள்ள 147 தொகுதிகளில் பாஜக 78 தொகுதிகளில் வெற்றிபெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதற்கான உரிமையைப் பெற்றுள்ளது.
கடந்த 2000ம் ஆண்டு முதல் தொடர்ந்து 24 ஆண்டுகளுக்கும் மேலாக ஒடிசாவின் முதல்வராக இருந்து வந்த நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் (பிஜேடி) தோல்வி அடைந்தது. இக்கட்சிக்கு இந்த தேர்தலில் 51 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளது.
தேர்தல் தோல்வியை அடுத்து நவீன் பட்நாயக், ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஆளுநர் ரகுபர் தாசை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
இந்த நிலையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிஜேடி எம்எல்ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் முன் பேசிய நவீன் பட்நாயக் கூறியதாவது: ”நான் முதல்முறை முதலமைச்சராக பதவியேற்கும்போது ஒடிசாவின் 70 சதவீத மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே இருந்தார்கள். ஆனால் இப்போது அது வெறும் 10 சதவீதமாக குறைந்துள்ளது.
விவசாயம் மற்றும் நீர்ப்பாசனத் துறை, பெண்களின் முன்னேறம் ஆகியவற்றில் நாம் மேற்கொண்ட முயற்சிகளே இந்த சாதனைக்கு வழிவகுத்தது. இதில் நாம் வெட்கப்பட எதுவும் இல்லை” இவ்வாறு நவீன் பட்நாயக் தெரிவித்தார்.