திருநெல்வேலி: கன்னியாகுமரி பகுதியில் புதன்கிழமை மாலையில் லேசான நில அதிர்வு ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். அதேநேரத்தில் கூடங்குளம் பகுதியில் நில அதிர்வு உணரப்பட்டதாக வெளியான தகவல் வதந்தி என்றும், அதை யாரும் நம்ப வேண்டாம் என்றும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கா.ப.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் பகுதியில் புதன்கிழமை மாலை 6.11 மணியளவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல் பரவியது. கூடங்குளத்தில் 2 அணு உலைகளில் மின் உற்பத்தி செய்யப்பட்டுவரும் நிலையில் அப்பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டதாக வெளியான தகவலால் மக்கள் மத்தியில் அச்சம் நிலவியது. ஆனால், அத்தகைய நில அதிர்வு எதுவும் உணரப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கூடங்குளம் அருகே உள்ள இருக்கன்துறை, நக்கனேரி பகுதியில் கல்குவாரிகளில் பாறைகளை வெடிவைத்து தகர்க்கும்போது ஏற்பட்ட அதிர்வாக இருக்கலாம் என்றும் தகவல் பரவியது. இந்நிலையில், கூடங்குளம் பகுதியில் நில அதிர்வு உணரப்பட்டதாக வெளியான தகவலை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கா.ப. கார்த்திகேயன் மறுத்துள்ளார்.
தமிழகத்தில் எந்த பகுதியிலும் கடந்த 30 நாட்களில் எவ்வித நிலஅதிர்வும் உணரப்படவில்லை. திருநெல்வேலி மாவட்டத்தில் நிலஅதிர்வு ஏற்பட்டதாக பரப்பப்படும் வதந்தியை நம்ப வேண்டாம் என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில் கன்னியாகுமரி பகுதியிலுள்ள விவேகானந்தபுரம், குண்டல், கொட்டாரம், அஞ்சுகிராமம் உள்ளிட்ட இடங்களில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதாகவும், ஆனால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் இப்பகுதி மக்கள் தெரிவித்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் நில அதிர்வு ஏற்பட்டதாக வெளியான தகவல் குறித்து அம்மாவட்ட அதிகாரிகள் தரப்பிலிருந்து எவ்வித கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.