பஸ் கட்டணத்தை தீர்மானிப்பதில் அரசியல் ரீதியாக எவ்வித தலையீடுகளையும் மேற்கொள்ள முடியாது என்றும் பஸ் கட்டண தீர்மானமானது போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு உரித்தான செயற்பாடு என்றும் வெகஜன ஊடகத்துறை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி; பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
எரிபொருள் விலை குறைவினால் பஸ் கட்டணம் குறைக்கப்படாமை தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (04) இடம்பெற்ற அமைச்சரை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலின் போது செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அதன்படி பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சட்டத்திற்கு இணங்க பஸ் கட்டணத்தை தீர்மானித்தல் தொடர்பான அதிகாரம் இலங்கை போக்குவரத்து ஆணைக்குழுவிற்குக் காணப்படுவதாகவும், ஆணைக் குழுவின் தலைவர் உட்பட பணிப்பாளர் சபையினால் 14 விடயங்களை அடிப்படையாகக் கொண்டு பஸ் கட்டணத்தை மாற்றும் சுட்டிக்கு இணங்க பஸ் கட்டண தீர்மானம் மேற்கொள்ளப்படுவதாகவும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
எரிபொருள் விலை குறைந்ததுடன் மாத்திரம் பஸ் கட்டணம் குறையாது என்றும், ஏனைய பயணங்களுடன் தொழில்நுட்ப ரீதியான விலை அதிகரிப்பை கருத்தில் கொண்டே அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர்களுடன் கலந்தாலோசித்து தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் பஸ் கட்டணம் தீர்மானிக்கப்படுவதாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.