பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பில் ஈஸ்வரசாமி, அதிமுக-வில் கார்த்திகேயன், பாஜக-வில் வசந்தராஜன், நாம் தமிழர் கட்சி சார்பில் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் போட்டியிட்டனர். இதில் ஈஸ்வரசாமி மற்றும் கார்த்திகேயன் ஆகிய இருவரும் அவரவர் கட்சியில் ஒன்றிய செயலாளர் பதவியில் உள்ளனர்.

வசந்தராஜன் மாவட்டத் தலைவராக உள்ளார். கள அரசியலை நன்கறிந்த நிர்வாகிகள் வேட்பாளர்களாக இறங்கியதால், தேர்தல் களம் சூடுபிடித்தது. பிரதான வேட்பாளர்கள் மூன்று பேருமே, அங்கு கணிசமாக உள்ள கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்.
ஏப்ரல் 19-ம் தேதி நடந்த தேர்தலில், 70.41 சதவிகிதம் வாக்குப் பதிவானது. அதிமுக வலுவாக உள்ள இந்த நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் உள்ளிட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளில் அதிமுக-வினரே சிட்டிங் எம்.எல்.ஏ-க்களாக உள்ளனர்.

முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், தாமோதரன் மற்றும் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் என்று சீனியர் நிர்வாகிகள் இருந்தும், தேர்தல் பணிகளில் அதிமுக-வில் வழக்கமான உற்சாகம் மிஸ் ஆகி, சுணக்கம் தென்பட்டது. தேர்தல் முடிவுகளும் அதை எதிரொலிக்கின்றன.
திமுக-வில் உள்கட்சி பூசல், செந்தில் பாலாஜி இல்லாதது போன்ற பிரச்னைகள் இருந்தன. செந்தில் பாலாஜிக்கு பதில், அமைச்சர் சக்கரபாணியை தொகுதி பொறுப்பாளராக நியமித்தனர். உள்கட்சி பூசல் பிரச்னையை சரிசெய்ய பூச்சிமுருகனை களமிறக்கினர்.

சக்கரபாணி, ஒட்டன்சத்திரத்தில் இருந்து பெரிய டீமை களமிறக்கி எந்த சலசலப்பும் இல்லாமல் தொகுதிக்குள் கவனிப்புகளை செய்து முடித்தார். அதனுடன் தொகுதிக்குள் கணிசமாக உள்ள சிறுபான்மை மக்கள் வாக்கு, மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட திட்டங்கள் திமுக-வை வெற்றி பெறவைத்துள்ளது.
கடைசி நேரத்தில் அதிமுக-வும் கவனிப்பில் காட்டிய வேகம், அவர்களின் வாக்குவங்கியை தக்கவைத்து இரண்டாமிடம் பிடிக்க வைத்துள்ளது. திமுக, அதிமுக வேட்பாளர்களுக்கு இணையாக களத்தில் ஸ்வீட் பாக்ஸ்களை கொட்டியதால், பாஜக வசந்தராஜனும் ஓரளவுக்கு டீசன்ட்டான வாக்குகளை பெற்று மூன்றாமிடம் பிடித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சி நான்காம் இடம் பிடித்துள்ளது. அதிமுக வலுவாக உள்ள பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியை இரண்டாவது முறையாக பிடித்திருப்பதை திமுக-வினர் கொண்டாடி வருகின்றனர்.
பெற்ற வாக்குகள்
திமுக –5,33,377
அதிமுக – 2,81,335
பாஜக – 2,23,354
நாம் தமிழர் – 58,221
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb