‘நீ என்னை அடிமை என்று நினைக்கும்போது… உன்னை அழிக்கும் ஆயுதமாக மாறிவிடுவது என் கடமை!’ – டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்
நடந்துமுடிந்திருக்கும் மக்களவைத் தேர்தல் 2024-ன் முடிவுகளில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, அறுதிப் பெரும்பான்மை பெற்றுள்ளது. ஆனால், தனிப்பட்ட வகையில் பா.ஜ.க 63 தொகுதிகளைப் பறிகொடுத்து, தனிப்பெரும் கட்சி என்கிற அந்தஸ்த்தை இழந்துள்ளது.
இது எதைப் பற்றியும் நரேந்திர மோடி கவலைப்பட்டதுபோல தெரியவில்லை. இத்தனை தொகுதிகளைப் பறிகொடுத்து வெற்றியில் தோல்வியைச் சந்தித்திருக்கும் போதும்… ‘மக்கள் என் மீதும் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீதும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்’ என்று கூச்சமே இல்லாமல் வாய் திறந்திருக்கிறார் மோடி.
மிஸ்டர் மோடி… உங்கள் மீது மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டனர் என்பதற்கு சாட்சியாகத்தான் 63 தொகுதிகள் பறிபோயிருக்கின்றன. இதற்குப் பிறகும்கூட, ‘தெய்வக் குழந்தை’ நிலையைவிட்டு, நிதர்சன உலகத்துக்கு வருவதற்கு கொஞ்சமாவது முயற்சி செய்து பாருங்கள.
நீங்கள் மிகமிக எதிர்பார்ப்புடன் இருந்த உத்தரப் பிரதேசத்திலேயே பலத்த அடி விழுந்துள்ளது. புண்ணியபூமி… ராமஜென்மபூமி… என்றெல்லாம் ராமரைக் காட்டிக் காட்டியே எல்லாவற்றையும் சமாளித்துவிடலாம் என்று நீங்கள் போட்டத் திட்டமெல்லாம் தவிடு பொடியாகிவிட்டது. ஆம், அயோத்தி ராமர் கோயில் இருக்கும் பைசாபாத் தொகுதியையே உங்களிடம் இருந்து பறித்து, சமாஜவாடி கட்சிக்கு வாரி வழங்கிவிட்டனர் அம்மக்கள். பாவம்… அந்த அளவுக்கு உங்கள் ராமர் ஆட்டத்தால் நொந்து நூலாகிவிட்டனர் அயோத்தி மக்கள். ‘கடவுளை கடவுளாகப் பாருங்கள்… கட்சியில் சேர்க்காதீர்கள்’ என்பது அவர்கள் சொல்லயிருக்கும் சேதிகளில் ஒன்று.
இப்படி நாடு முழுக்க நீங்கள் பறிகொடுத்தவற்றுக்கெல்லாம் அந்தந்த மக்கள் சொல்லியிருக்கும் சேதிகள் பற்பல. ஆனால், மணிப்பூர் உங்களுக்குச் சொல்லியிருக்கும் சேதி… ஒன்றே ஒன்றுதான். அது, ‘கொடுங்கோன்மைக்கு மரண அடி’ என்பது மட்டுமே.
மணிப்பூர் மாநிலத்தில் ஓராண்டு காலமாக இனரீதியில் மக்கள் பிளவுபடுத்தப்பட்டு, ரத்தம் குடிக்கப்பட்டு வருவதும்… வழக்கம்போல பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறைகளும் நினைத்துப் பார்க்கவே நடுநடுங்க வைக்கின்றன. அதற்கான பதிலடியை… தண்டனையை… தங்களது வாக்குகள் மூலம், திருப்பிக் கொடுத்துள்ளனர் அம்மாநில மக்கள்.
மணிப்பூர் மாநிலத்திலிருக்கும் இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளிலும் இந்திய தேசிய காங்கிரஸ், பலமான வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ.க-விடமிருந்து தட்டிப் பறித்திருக்கிறது. தேர்தல் பிரசாரத்துக்காகக்கூட அந்த மாநிலத்துக்குள் மோடி நுழையவில்லை. பாவம், அவருக்கே வலித்திருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
இன்னர் மணிப்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிமோல் அகோஜம், ஒரு லட்சத்துக்கு மேலான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார். இவர், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர். மேத்தி சமூகத்தைச் சேர்ந்தவர்தான் இவர். ஆனால், மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் மேத்தி மற்றும்- குகி இன மக்களுக்கு இடையேயான பிரச்னையில், மாநிலம் மற்றும் மத்தியில் ஆளும் பா.ஜ.க-வின் கொள்கைகள், செயல்பாடுகள், செயல்பாடின்மை, பாராமுகம் குறித்தெல்லாம் தொடர்ந்து விமர்சனத்தை முன்வைத்து செயல்பட்டு வந்தவர். அவுட்டர் மணிப்பூர் தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் ஆல்ஃபிரட் கே ஆர்தர் 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.
பா.ஜ.க கூட்டணியைத் தோற்கடித்திருப்பதன் மூலம், அழுத்தமான அரசியல் ஸ்டேட்மென்ட்டை வெளிப்படுத்தியுள்ளனர் மண்ணின் மக்கள். ஒரு நிலப்பரப்பின் அரசியலில் அபாயமான உள் அரசியல் செய்தது, மக்களை மோதவிட்டு, மக்கள் மடிவதை வேடிக்கை பார்த்தது, தொழில்நுட்பத்தை முடக்கி மாநிலத்தை தேசத்தின் பார்வையில் இருந்தே மறைத்தது என… அங்கு மாநிலத்தை ஆளும் பா.ஜ.க கிட்டத்தட்ட ஒரு வருடமாக அதை ரத்த பூமியாகவே வைத்திருக்கிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக… ஒரு பிராந்தியப் பிரச்னைக்கும்கூட பெண்களின் உடல்கள் வெறியாட்டக் களமாக்கப்படும் கொடுமையை இந்த டிஜிட்டல் யுகத்திலும் தொடரச் செய்தக் கொடுமைக்கு பாவமன்னிப்பே கிடையாது. குகி பழங்குடியினத்தை சேர்ந்த இரண்டு பெண்களை, மேத்தி சமூகத்தைச் சேர்ந்த ஆண் கும்பல், நிர்வாணமாக வீதியில் அழைத்துச் சென்ற வீடியோ உலகத்தையே உலுக்கியபோதும், ஒட்டுமொத்த மக்களுக்கும் நான் தலைவர் என்று இந்திய உறுதிமொழியேற்று இந்திய பிரதமர் பதவியில் அமர்ந்திருந்த மோடி, கடைசிவரை மௌனம் காத்தது கொடுமையிலும் கொடுமை. அதற்குத்தான் மரண அடி கொடுத்துள்ளனர் மக்கள்.
மணிப்பூரின் பிரச்னை என்ன?
பா.ஜ.க ஆளும் மணிப்பூர் மாநிலத்தின் மக்கள் தொகையில் 53% பேர் மேத்தி சமூகத்தினர். இவர்களுடன், குகி, நாகா உள்ளிட்ட பழங்குடி இனத்தைச் சேர்ந்த 40% சதவிகித மக்களும் வாழ்கின்றனர். பெரும்பான்மை மேத்தி சமூகத்தினர் இந்து மதத்தையும், பெரும்பான்மை குகி, நாகா சமூகத்தினர் கிறிஸ்தவ மதத்தையும் பின்பற்றுகின்றனர். இதுபோதாதா பா.ஜ.க-வுக்கு?!
பள்ளத்தாக்குப் பகுதிகளில் மேத்தி சமூகத்தினரும், மலைஉள்ளிட்ட வனப்பகுதிகளில் பழங்குடியினரும் வசிக்கின்றனர். மலைப்பகுதிகளில் நிலம் வாங்கும் சட்ட உரிமையைப் பெறும்வகையில், தங்களையும் பழங்குடிப் பட்டியலில் இணைக்கச் சொல்லி மேத்தி சமூகத்தினர் வலியுறுத்தினர். ஏற்கெனவே, மக்கள்தொகை மற்றும் அரசியல் பிரதிநிதித்துவத்தில் ஆதிக்கம் செலுத்தும் மேத்தி சமூகத்தினருக்கு பழங்குடி அந்தஸ்தும் கொடுக்கப்பட்டால், தங்கள் நிலம் பறிபோகும் என்று எதிர்ப்புக் காட்டினர் பழங்குடிகள்.
இது தொடர்பான வழக்கு, மணிப்பூர் உயர் நீதிமன்றப் படியேற, ‘மேத்தி மக்களை, பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்‘ என்று மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்யுமாறு மணிப்பூர் அரசுக்கு உத்தரவிட்டது நீதிமன்றம். பழங்குடி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து முன்னெடுத்த போராட்டம், இருதரப்பு மோதல்களுடன் கலவரமாகி, ராணுவம், ஊரடங்கு, இணைய சேவை முடக்கம் எனப் பற்றியெரிந்தது.
உட்சபட்ச கொடூரமாக, குகி பழங்குடியினத்தை சேர்ந்த இரண்டு பெண்களை, மேத்தி சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் கும்பல் நிர்வாணப்படுத்தி பாலியல் துன்புறுத்தல் செய்தபடி வீதியில் அழைத்துச் சென்ற வீடியோ, அம்மாநிலத்தில் இணைய முடக்கம் தளர்வு செய்யப்பட்ட பின்னர் வெளிவந்து, உலகத்தையே உலுக்கியது. அந்தப் பெண்களில் ஒருவர் கூட்டுப்பாலியல் வன்முறைக்கும் ஆளாக்கப்பட்டார். அவர்கள் குடும்பத்தினர்கள் கொல்லப்பட்டனர்.
இத்தனை நடந்தும்… மாநிலத்தை ஆளும் பா.ஜ.க அரசு, பிரச்னைக்கு எந்தத் தீர்வையும் எட்டாமல் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தது.
சினிமா நட்சத்திரங்களை நேரில் அழைத்து அவ்வப்போது புகைப்படம் எடுத்துக்கொள்வது, உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியைக் காண மைதானத்துக்குச் சென்றது என, பொழுதுபோக்கு அம்சங்களுக்கெல்லாம் நேரம் ஒதுக்குவதற்கு பிரதமர் மோடியின் டைரியில் இடமிருந்தது. ஆனால்… மணிப்பூர் வன்முறை பற்றி கருத்தோ, கண்டனமோகூட தெரிவிப்பதற்கு நேரமில்லை.. பாவம். கடைசிவரை அதிகார மௌனத்திலேயே இருந்தார்.
’அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும்’ என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியே கண்டித்த பின்னர்தான், அப்பிரச்னை குறித்து சம்பிரதாயமாக வாயசைத்தார், மோடி.
மணிப்பூர் வன்முறையை தொடர்ந்து நிவாரண முகாம்களில் வைக்கப்பட்ட மக்களில் 50,000 பேர் இன்றும் அங்குதான் கிடந்துழன்று வருகிறார்கள். மாநிலத்தில் இன்னமும் இயல்புநிலை திரும்பவில்லை. அதிர்ச்சி என்னவென்றால், ’மேன் வெர்சஸ் வைல்டு’ தொலைக்காட்சி நிகழ்ச்சி முதல் விவேகானந்தர் பாறை நினைவிட 360 டிகிரி கேமரா தியானம் வரை பல லொக்கேஷன்களில், கெட்டப்களில் நாம் பார்த்த பிரதமர் மோடி, தன் பா.ஜ.க கட்சி ஆளும் மணிப்பூர் மாநிலத்துக்கு தேர்தல் பிரசாரத்துக்காகக்கூட செல்லவில்லை, அம்மக்களைச் சந்திக்கவே இல்லை. ’இனி எப்போதும் நீங்கள் எங்களைச் சந்திக்கவே வேண்டாம்’ என்ற மெசேஜைதான் இப்போது மக்கள் சொல்லியிருக்கிறார்கள் நம் பிரதமருக்கு.
மக்கள், தங்கள் நலனுக்காக நாடாளுமன்ற பிரதிநிதியை தேர்ந்தெடுக்கும் தேர்தல்கள் வழக்கமானவை. ஆனால், ஆட்சி அதிகாரத்தால் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கான தண்டனையின் பதிவாக, தங்கள் வாக்கை மக்கள் பதிவு செய்யும் தேர்தல்கள், வரலாற்றுக் குறிப்பில் இடம்பெறுபவை. அந்த வகையில், இந்திய தேர்தல் வரலாற்றுப் பதிவேட்டில் மணிப்பூர் மக்கள் இப்போது பா.ஜ.க-வுக்கும் மோடிக்கும் எதிராக இட்டிருக்கும் கையெழுத்து, அரசியல் பிழை செய்பவர்களுக்கான கூற்றுவனின் மொழி.
– அவள்
#VoiceOfAval: இது பெண்களின் வாதத்தை பொதுச் சமூகத்தின் முன் வைக்கும் `அவளின் குரல்’. பெண்கள் பிரச்னைகளின் பேசாபொருளை மக்கள் முன் எடுத்துவைப்பதற்கான அவள் விகடனின் முன்னெடுப்பு!