மாகாணப் பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை ஆட்சேர்ப்புச் செய்யும் செயற்பாடு கடந்த மாதம் ஆரம்பித்ததாகவும், தற்போது மாகாணப் பாடசாலைகளில் 60 வீதத்தை விட அதிக ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்பட்டு நிறைவடைந்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் பேராசிரியர் சுசில் பிரேம்ஜயந்த இன்று (05) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
குருணாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்களின் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்கள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் அசங்க நவரத்ன முன்வைத்த வாய் மொழி மூலமான கேள்விக்கு பதிலளிக்கும் போதே கல்வி அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மாகாணப் பாடசாலைகளில் ஆசிரியர்களின் ஆட்சேர்ப்புத் தொடர்பாக மேன்முறையீட்டு நீதி மன்றத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள வழக்கின் தாமதத்தினால் இவ்வாறு தாமதமானதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
தேசிய பாடசாலைகளில் ஆசிரியர்களை உள்வாங்குவதற்காக பரீட்சைகள் நடாத்தப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அந்நடவடிக்கைளை நிறைவு செய்யலாம் என்றார்.
தேசிய பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை உள்வாங்குதல் தொடர்பாக அமைச்சர தொடர்ந்தும் குறிப்பிடுகையில், பட்டதாரி ஆசிரியர்களின் ஆட்சேர்ப்புத் தொடர்பாகக் காணப்படும் வழக்கின் தாமதத்தினால் தேசிய பாடசாலை ஆசிரியர் நியமனம் வழங்கலும் தாமதமாவதாகவும், பரீட்சைகளை நடாத்தும் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டு 15 மாதங்கள் கடந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அத்துடன் ஆசிரியர் சேவை ஒழுங்குவிதிகளில் பட்டதாரிகளை உள்வாங்கும் போது பரீட்சையொன்றை நடாத்தி அதன் புள்ளிகளின் படி ஆசிரியர்களை ஆட்சேர்ப்புச் செய்யுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. நாம் 1985இல் கல்விக் கல்லூரிகளை ஆரம்பித்தோம். தற்போது 19 கல்விக் கல்லூரிகள் காணப்படுகின்றன.
இவற்றுக்கு உயர்தரப் பரீட்சை Z புள்ளி அடிப்படையில் உள்வாங்கப்படுகின்றனர். இவ் 19 கல்விக் கல்லூரிகளையும் இணைத்து, இலங்கைக் கல்விப் பல்கலைக்கழகத்தை ஆரம்பிப்பதற்குத் தேவையான சட்டமூலம் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
தரமான ஆசிரியர்கள் பாடசாலைகளுக்குக் கிடைக்கும் வரை கல்வியைத் தயாரிக்க முடியாது. இதனை சுயாதீனமான என்ற கதையுடன் இந்த செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.