பெய்ரூட்:
இஸ்ரேல் ராணுவத்துக்கும், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா போராளி குழுவினருக்கும் இடையே தொடர்ந்து மோதல் நடைபெறுகிறது. எல்லையில் நடைபெற்று வரும் இந்த மோதல்களில் லெபனானில் சுமார் 400 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் போராளிகள் ஆவர். 70-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் போராளிகள் அல்லாதவர்களும் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேலில் கடந்த அக்டோபர் மாதம் முதல் 15 ராணுவ வீரர்களும் 10 பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர். எல்லையின் இருபுறமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
இந்நிலையில், மோதலில் பாதிக்கப்பட்ட தெற்கு லெபனானில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் வெள்ளை பாஸ்பரஸ் எரியூட்டும் குண்டுகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், ‘லெபனான் மீது நடத்தப்பட்ட வெள்ளை பாஸ்பரஸ் தாக்குதல் பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் செயல் ஆகும். இதன்மூலம் சர்வதேச சட்டம் மீறப்பட்டிருக்கிறது. குறைந்தது 5 நகரங்கள் மற்றும் கிராமங்கள் மீது நடத்தப்பட்ட வெள்ளை பாஸ்பரஸ் தாக்குதல் காரணமாக மக்களுக்கு தீக்காயங்கள் ஏற்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை, ஆனால் சுவாச பாதிப்பு குறித்த விவரங்களை ஆராய்ச்சியாளர்கள் கேட்டுள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் வசிக்கும் மக்களிடம் கருத்துக்களை கேட்டு அந்த தகவலையும் மனித உரிமை அமைப்பு தனது அறிக்கையில் பதிவிட்டுள்ளது.
வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகள் விழுந்தபிறகு 173 பேருக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டதாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சர்ச்சைக்குரிய வெடிமருந்துகளை மக்கள் வசிக்கும் பகுதிகளில் வீசுவது சர்வதேச சட்டத்தின் கீழ் குற்றம் என்று மனித உரிமை வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.
வெள்ளை பாஸ்பரஸை புகையை வெளியிடுவதற்காக மட்டுமே பயன்படுத்துவதாகவும், பொதுமக்களை குறிவைக்கவில்லை என்றும் இஸ்ரேல் கூறுவது குறிப்பிடத்தக்கது.