நாகர்கோவில்: விளவங்கோடு சட்டப்பேரவை இடைதே்தேர்தலில் விஜயதரணியை விட, தாரகை கத்பர்ட் அதிக வாக்குகள் பெற்றிருப்பதால் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர்.
குமரி மாவட்டம் விளவங்கோடு சட்டப்பேரவை தேர்தலில் 3 முறை தொடர்ச்சியாக காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு ஹாட்ரிக் வெற்றி பெற்றவர் விஜயதரணி. இவர் தேர்தலில் எம்பி சீட் கிடைக்காததாலும், கட்சியில் தனக்கு முக்கியத்துவம் குறைந்து வந்த அதிருப்தியாலும் பாஜகவில் இணைந்தார். அவர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து விளவங்கோடு இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் முக்கிய கட்சிகள் சார்பில் பெண் வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டனர். காங்கிரஸ் சார்பில் தாரகை கத்பர்ட், பாஜக சார்பில் நந்தினி, அதிமுக சார்பில் ராணி, நாம் தமிழர் சார்பில் ஜெமினி ஆகியோர் போட்டியிட்டனர். சுயேட்சைகள் உட்பட மொத்தம் 10 பேர் களத்தில் நின்றனர்.
இத்தேர்தலில் தாரகை கத்பர்ட் 91,054 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளர் நந்தினி 50,880 வாக்குகள் பெற்றார். அவரை விட 40,174 வாக்குகளை தாரகை கத்பர்ட் பெற்றிருந்தார். விஜயதரணி பாஜகவுக்கு சென்ற நிலையில் விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் செல்வாக்கு சரியும் வாய்ப்பிருப்பதாக கட்சியினர் தரப்பில் கருத்துக்கள் நிலவி வந்தது.
இந்நிலையில், இந்த இடைத்தேர்தலில் விஜயதரணியை விட தாரகை கத்பர்ட் அதிக வாக்குகள் பெற்றிருப்பதால் காங்கிரஸார் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 2021 தேர்தலில் விஜயதரணி 87,473 வாக்குகள் பெற்றிருந்தார். பாஜக வேட்பாளர் ஜெயசீலன் 58,804 வாக்குகள் பெற்றிருந்தார்.
கடந்த தேர்தலை விட இத்தேர்தலில் பாஜக வாக்குகள் குறைந்துள்ள அதே நேரம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தாரகை கத்பர்ட்டுக்கு 3,581 வாக்குகள் கூடுதலாக கிடைத்துள்ளது. விளவங்கோடு தொகுதி தேர்தல் வரலாற்றில் இதுவரை காங்கிரசும், கம்யூனிஸ்டுகளும் தான் வெற்றி பெற்றுள்ளன. தற்போது இரு கட்சிகளும் கூட்டணி என்பதால் மீண்டும் அத்தொகுதியை காங்கிரஸ் தக்கவைத்துள்ளது.