விண்வெளி மையத்திற்கு சுனிதா வில்லியம்ஸ் பயணம்

நியூயார்க்,

போயிங் நிறுவனம் ஸ்டார்லைனர் விண்கலத்தை வடிவமைத்தது. இந்த விண்கலத்தில் நாசா விண்வெளி வீரர் புட்ச் வில்மோர், விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்ல இருந்தனர்.

ஆனால் தொழில் நுட்ப கோளாறு காரணமாக போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் பயணம் தடைபட்டது. தொழில் நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்ட நிலையில் இன்று போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் அமெரிக்க கடற்படை கேப்டன் புட்ச் வில்மோர், சுனிதா வில்லியம்ஸை சுமந்து கொண்டு விண்வெளி நிலையம் நோக்கி புறப்பட்டது.

அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி ஏவுதளத்தில் இருந்து அட்லஸ்-வி ராக்கெட் மூலம் பயணம் மேற்கொள்கின்றனர். அட்லஸ்-வி ராக்கெட்டில் இரண்டு விண்வெளி வீரர்கள் அமர்ந்திருக்கும் ஸ்டார் லைனர் விண்கலம் தனியாக பிரிந்தது.

25 மணி நேர பயணத்திற்குப் பிறகு வியாழக்கிழமை (நாளை) அவர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் ஒரு வாரம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி ஆய்வு மேற்கொண்டு ஜூலை 14-ந்தேதி பூமிக்கு திரும்புகிறார்கள்.

சுனிதா வில்லியம்ஸ் இதற்கு முன்னதாக இரண்டு முறை விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். தற்போது 3-வது முறையாக பயணம் மேற்கொண்டுள்ளார். சுனிதா வில்லியம்ஸ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவராவார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.