சென்னை: மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் தேமுதிக தோல்வி அடைந்துள்ளது. பிரேமலதா தலைமையிலான தேமுதிக மீண்டு வருமா என கேள்விகள் எழுந்துள்ளது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற்றது. இந்த முறை திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் தங்கள் தலைமையில் கூட்டணி அமைத்தும், நாம் தமிழர் கட்சி தனித்தும் போட்டியிட்டன. நான்கு முனை போட்டியில் திமுக கூட்டணியானது மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. இத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த தேமுதிக விருதுநகர், கடலூர், தஞ்சாவூர், திருவள்ளூர்(தனி), வடசென்னை ஆகிய 5 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் தோல்வியை தழுவியது.
குறிப்பாக திருவள்ளூர், வடசென்னை ஆகிய தொகுதிகளில் தேமுதிக வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். இதில் வட சென்னை தொகுதியில் தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதி 72,016 வாக்குகள் பெற்று 3-ம் இடத்தை பிடித்தார். விருதுநகரில் மட்டும் தேமுதிக சார்பில் போட்டியிட்ட விஜயபிரபாகரன் (விஜயகாந்த் மகன்) காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு இறுதி வரை கடுமையான போட்டியாக விளங்கினார். குறைந்தளவில் 4,379 வாக்குகள் வித்தியாசத்தில் தான் தோல்வி அடைந்தார். ஒட்டுமொத்தமாக விஜய பிரபாகரன் 3 லட்சத்து 80,877 வாக்குகள் பெற்று அனைவரின் கவனத்தை பெற்றார்.
அதேநேரம் தொடர்ந்து சரிவில் பயணித்த தேமுதிக வாக்கு விகிதம் சற்று உயர்ந்துள்ளது. தற்போதைய தேர்தலில் தேமுதிக தான் போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் சேர்த்து 11 லட்சத்து 28,616(2.59%) வாக்குகளைப் பெற்றுள்ளது. இது சமீபத்திய தேர்தல்களைவிட அதிகமாகும். முதன்முதலாக 2005-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 234 இடங்களில் போட்டியிட்ட தேமுதிக 27.64 லட்சம் வாக்குகளை பெற்றது. கட்சி ஆரம்பித்தவுடன் நடைபெற்ற தேர்தலில் தேமுதிகவுக்கு சுமார் 8.4 சதவீத வாக்குகள் கிடைத்தது அனைவருருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. மேலும், விருத்தாச்சலத்தில் போட்டியிட்ட அந்த கட்சியின் தலைவரான மறைந்த விஜயகாந்த் வெற்றி பெற்றார்.
அதற்கடுத்த 2009 மக்களவைத் தேர்தலிலும் தனித்து போட்டியிட்ட தேமுதிக 31.26 லட்சம் வாக்குகளை பெற்றது. இது பதிவான மொத்த வாக்குகளில் 10.3 சதவீதமாகும். 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து தேமுதிக போட்டியிட்டது. தேமுதிகவுக்கு 7.9 சதவீத வாக்குகளுடன் 29 இடங்களை கைப்பற்றி எதிர்க்கட்சியாகவும் அங்கீாரம் பெற்றது.
ஆனால், அங்கிருந்துதான் தேமுதிகவின் வீழ்ச்சி ஆரம்பித்தது. அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக கருதப்பட்ட தேமுதிக, அதிமுக கூட்டணியில் சென்றதை நடுநிலை வாக்காளர்கள் விரும்பவில்லை. கட்சிக்குள் குடும்பத்தின் ஆதிக்கம் வந்தததை தொடர்ந்து பண்ட்ருடி ராமசந்திரன் உட்பட முக்கிய நிர்வாகிகள் தேமுதிவில் இருந்து வெளியேறினர்.
அதன்பின் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட கட்சியின் வளர்ச்சி தடைப்பட்டது. 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது பாஜக கூட்டணியில் 14 இடங்களில் போட்டியிட்ட தேமுதிக அனைத்திலும் தோல்வி அடைந்தது. வாக்கு விகிதம் 5.1 சதவீதமாக குறைந்தது. அதற்கு பிறகும் சரிவு தொடர்ந்தது. 2016 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில் மதிமுக, இடதுசாரிக் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் இணைந்து 104 இடங்களில் போட்டியிட்ட தேமுதிக ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. அக்கட்சி பெற்ற வாக்குகளின் சதவீதம் 2.41 சதவீதமாக குறைந்தது. உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் சுமார் 34,000 வாக்குகளுடன் 3-வது இடத்தையே பிடித்தார்.
இதற்கு பிந்தைய 2019 மக்களவைத் தேர்தலில் 2.16 சதவீதமும், 2021 சட்டமன்றத் தேர்தலில் 0.43 சதவீதமாகவும் தேமுதிகவின் வாக்கு வங்கி வெகுவாக குறைந்தது. இந்தசூழலில் தேமுதிக தலைவரான விஜயகாந்த் உடல்நலக் குறைவால் கடந்த டிசம்பர் 28-ம் தேதி மரணம் அடைந்தார். அதற்கு சில வாரங்கள் முன்னரே அவரின் மனைவி பிரேமலதா கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
தேமுதிக தொடங்கப்பட்டதில் இருந்து அந்த கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருந்து வந்த பிரேமலதா, 2018-ம் ஆண்டில் அக்கட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்டார். இடைப்பட்ட காலத்தில் விஜயகாந்த் உடல்நலம் வெகுவாக குன்றியதால் கட்சியின் முக்கிய முடிவுகளை பிரேமலதாவே எடுத்து வந்தார். விஜயகாந்த் மறைவுக்கு பின்பு கட்சியின் முழுமையான கட்டுப்பாடு பிரேமலதாவிடம் வந்து சேர்ந்தது.
தொடர் தோல்விகள், பொருளதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் கட்சியை வளர்ச்சி பாதையில் கொண்டுச் செல்ல வேண்டிய நிர்பந்தம் பிரேமலதாவுக்கு இருந்தது. அதற்கேற்ப தற்போதைய மக்களவைத் தேர்தலை அதிமுக கூட்டணியில் சேர்ந்து எதிர்கொள்ள தேமுதிக முடிவு செய்தது. அது தேமுதிகவுக்கு சாதகமாக அமைந்துள்ளது. அதிமுக கூட்டணியில் 5 தொகுதிகளில் போட்டியிட்டு 2.59% வாக்குகளை பெற்று மீண்டும் அரசியல் களத்தில் தன் இருப்பை தக்க வைத்துள்ளது.
எனினும், அதிமுகவிடம் சாதகமான தொகுதிகளை கேட்டுப் பெற்று, விருதுநகர் போல் மற்ற தொகுதிகளிலும் தேமுதிக தீவிரமாக களப்பணி ஆற்றியிருக்க வேண்டும். மேலும், விஜயகாந்த் மறைவு மீதான அனுதாபத்தையும் முழுமையாக அறுவடை செய்திருந்தால் 4 சதவீத வாக்குகளை தேமுதிக பெற்றிருக்கக்கூடும் என்று அரசியல் விமர்சகர்கள் தரப்பில் கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.