350 தொகுதிகள் என்ற இலக்கை நிர்ணயித்து பயணித்த மோடி தலைமையிலான பா.ஜ.க, 240 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றது. அதனால், தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க முடியாத சூழலில் ஏற்பட்டிருக்கிறது. காங்கிரஸ் 99 இடங்களை வென்ற நிலையில், இந்தியா கூட்டணியே மொத்தம் 232 தொகுதிகளை வென்றிருக்கிறது. எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை அமையாததால், என்.டி.ஏ – இந்தியா கூட்டணிக் கட்சிகள் போட்டிப்போட்டு, 16 தொகுதிகளை வென்ற தெலுங்கு தேசம் கட்சியிடமும், 2 தொகுதிகளைக் கைப்பற்றிய ஜே.டி(யூ) கட்சியிடமும் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்கள் வெளியானது.

ஆந்திர பிரதேசத்தின் சந்திரபாபு நாயுடு, பீகாரின் நிதிஷ் குமாரின் ஆதரவு யாருக்கு… மத்தியில் ஆட்சியமைக்கப் போவது யார் என்பதில் தெளிவில்லாமல் இருந்தது. ஆனால், தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்துகொண்டிருக்கும்போதே, ஜே.டி(யூ) என்.டி.ஏ கூட்டணியுடன்தான் நிற்கும் என அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் K.C.தியாகி தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில், இன்று இரண்டு பிரதான கூட்டணிக் கட்சிகளும் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி வருகின்றன. இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நிதிஷ் குமார் டெல்லி விரைந்ததாக தகவல் வெளியானது. இந்த நிலையில், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, “இன்று நான் டெல்லி செல்கிறேன். தேசிய ஜனநாயக கூட்டணியுடன் உறுதியாக நிற்கிறேன். என்மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைக் கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அரசியலில் உயர்வும் தாழ்வும் எல்லாமே சகஜம். பல அரசியல் தலைவர்கள் அரசியலை விட்டே வெளியேறியிருக்கிறார்கள். இந்த தேர்தல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த தேர்தலில் வாக்களிப்பதற்காக பலர் வெளிநாடுகளிலிருந்தும் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பியிருக்கிறார்கள்.
இந்த இடத்துக்கு வருவதற்கு பல தூக்கமில்லாத இரவுகளை கடந்திருக்கிறேன். தொண்டர்கள், தெலுங்கு தேசம் கட்சியை வெற்றியடையச் செய்ய நிறைய முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாக, ஆந்திராவில் ஜனநாயகத்தை பாதுகாக்க போராடி வருகிறோம். அந்தப் போராட்டம் இப்போது வெற்றி பெற்றிருக்கிறது. கடந்த ஐந்தாண்டுக்கால அவலங்களுக்குப் பிறகு, ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் முயற்சியில் எங்களுடன் இணைந்ததற்காக பவன் கல்யாணுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb