கோலிவுட்டில் திருமணமாகாத இளைஞர் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் பிரேம்ஜி.
கங்கை அமரனின் மூத்த மகன் வெங்கட் பிரபு பிரபலமான இயக்குநராக இருக்க, அவரின் இளைய மகன் பிரேம்ஜி அமரன் நடிகராகவும் பாடகராகவும் கோலிவுட் யூத்தாக வலம் வந்துகொண்டிருக்கிறார். நீண்ட நாள்களாக சிங்கிளாகவே இருந்த இவர், தற்போது தான் காதலித்த பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார். இவர்களின் திருமணம் வரும் ஜூன் 9ம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) எளிமையான முறையில் நடைபெறவிருக்கிறது. இது தொடர்பான செய்தியும், திருமணப் பத்திரிக்கையும் கடந்த வாரம் முதலே சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது.
.jfif.jpeg)
இந்நிலையில் இது குறித்து தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரேம்ஜியின் சகோதரர் இயக்குநர் வெங்கட் பிரபு, “எங்கள் குடும்பத்தில் பல வருடங்கள் கழித்து ஒரு நல்ல நிகழ்வு நடக்க இருக்கிறது. ‘பாகுபலியைக் கட்டப்பா ஏன் கொன்றார்?’ ‘சொப்பனசுந்தரியை இப்போ யாரு வெச்சிருக்கா?’ இதை எல்லாவற்றையும் விட, ‘பிரேம்ஜிக்கு கல்யாணம் எப்போ?’ என்ற உங்கள் கேள்விக்குப் பதில், வரும் 9ஆம் தேதி சிறிய அளவில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில், பிரேம்ஜி தான் விரும்பும் பெண்ணை, அம்மாவின் ஆசிர்வாதத்துடன் கரம் பிடிக்கிறார். அம்மா வெகுவாக எதிர்பார்த்த இந்த திருமணத்தை நெருங்கிய உறவுகளுடனும், நண்பர்களுடனும் எளிய முறையில் நடத்த விரும்புகிறோம்!
இது தெரியாமல் நண்பர் ஒருவர் திருமணப் பத்திரிக்கையை பொதுவெளியில் பகிர்ந்துவிட்டார்! எப்படி கல்யாணப் பத்திரிக்கை வைரல் ஆனதோ, அதேபோல் மணமகள் மீடியாவைச் சேர்ந்தவர் என்றும் புகைப்படங்கள் உலவுகின்றன. மணமகள் மீடியாவைச் சேர்ந்தவர் இல்லை.

திருமணம் முடிந்தவுடன் புகைப்படங்களைப் பகிர்கிறேன் எங்களுடைய பிரைவசியை மதித்து இருந்த இடத்தில் இருந்தே மணமக்களை வாழ்த்தி அதையும் வைலாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். உறுதியாக திருமண வரவேற்பில் அனைவரையும் சந்திப்போம்! BTW, THE GOAT அப்டேட் விரைவில்…” என்று பதிவிட்டிருக்கிறார்.
வாழ்த்துகள் பிரேம்ஜி