நடப்பு டி20 உலகக்கோப்பைத் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் கோலாகலமாக நடந்து வருகிறது. ஜூன் 2 ஆம் தேதி உலகக்கோப்பை தொடங்கிய நிலையில் இந்திய அணி இன்றுதான் தங்களது முதல் போட்டியில் அயர்லாந்துக்கு எதிராக ஆடவிருக்கிறது. நியூயார்க்கில் நடக்கவிருக்கும் இந்தப் போட்டிக்கு முன்பாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பத்திரிகையாளர்களைச் சந்தித்திருந்தார். அதில் பல முக்கியமான விஷயங்கள் குறித்து பேசியிருந்தார்.
இந்திய அணியின் தற்போதைய பயிற்சியாளராக இருக்கும் டிராவிட்டுக்கு இதுதான் கடைசித் தொடர். இத்தோடு அவரின் பணிக்காலம் முடிவடைகிறது. இந்நிலையில் ரோஹித்திடம் டிராவிட் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ரோஹித், ‘இந்திய அணியின் பயிற்சியாளராக தொடரவே வேண்டும் என டிராவிட்டிடம் எவ்வளவோ பேசிப் பார்த்தேன். ஆனால், அவருக்கு இதைத் தாண்டியும் கவனம் செலுத்த நிறைய வேலைகள் இருப்பதாகத் தெரிகிறது. தனிப்பட்ட முறையில் அவருடன் பணியாற்றியதில் பெரும் மகிழ்ச்சி. இது ஒரு நல்ல அனுபவம். மற்ற வீரர்களைக் கேட்டாலும் கூட இப்படித்தான் சொல்வார்கள் என நினைக்கிறேன்.
டிராவிட்டுடனான எனது பயணம் நீண்ட நெடியது. அயர்லாந்தில் என்னுடைய அறிமுகப் போட்டியில் ஆடியபோது அவர்தான் என்னுடைய கேப்டன். அவரின் ஆட்டத்தைப் பார்த்துதான் நாங்கள் வளர்ந்தோம். இந்திய அணிக்கான அவரின் பங்களிப்பு என்னவென்பதை முழுமையாக அறிந்திருக்கிறோம்.
பல சிக்கலான சூழல்களில் சிறப்பாக ஆடி இந்திய அணியைக் காப்பாற்றியிருக்கிறார். கரியர் முழுவதுமே ஒருவித நெஞ்சுரத்தோடும் உறுதியோடும் ஆடியிருந்தார். அவர் பயிற்சியாளரான போது அவரிடமிருந்து நான் அந்த குணாதிசயத்தைத்தான் கற்றுக்கொள்ள விரும்பினேன். அவர் எங்களுக்கு ஒரு மாபெரும் இன்ஸ்பிரேஷன். நாங்கள் உலகக்கோப்பையை தவிர எல்லா பெரிய தொடர்களையும் வென்றுவிட்டோம் என நினைக்கிறேன்.’ என்றார்
`டிராவிட்டுக்காக நீங்கள் இந்த உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என நினைக்கிறீர்களா?’ என ஒரு கேள்வி, ‘நான் இதற்கு மேல் எதுவும் பேச விரும்பவில்லை.’ என ரோஹித் பதிலளிக்கிறார்.
இதன் தொடர்ச்சியாக ‘ஒருவேளை நீங்கள் இந்தியாவில் நடந்த உலகக்கோப்பையை போல இந்த உலகக்கோப்பையையும் நீங்கள் இழந்தால் என்ன நடக்கும்?’ என ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. அதற்கு ரோஹித், ‘ஒன்றும் நடக்காது. வாழ்க்கை அதன்போக்கில் அப்படியே நகரும். நான் ஒரு வீரராக அணிக்கு என்னால் என்ன பங்களிப்பை கொடுக்க முடியுமோ அதை கொடுக்கப்போகிறேன். வீரர்களை ஒரு அணியாக சிறப்பாக வழிநடத்தப் போகிறேன்.
என்னுடைய கவனம் எல்லாம் இதில் மட்டும்தான் இருக்கிறது. இதைத்தாண்டி பெரிதாக யோசிக்க விரும்பவில்லை. அப்படி யோசிப்பது எந்தப் பலனையும் கொடுக்கப் போவதும் இல்லை. வருங்காலத்தைப் பற்றி பெரிதாக யோசிக்காமல் நிகழ்காலத்தில் இந்த சமயத்தில் என்ன செய்ய வேண்டுமோ அதில் மட்டுமே முழுக்கவனமும் இருக்கிறது.’ என்றார் ரோஹித் சர்மா.
தொடர்ந்து அயர்லாந்துக்கு எதிரான போட்டியைப் பற்றி பேசியவர், ‘அயர்லாந்து ஒரு நல்ல அணி. அவர்கள் நிறைய டி20 போட்டிகளில் ஆடியிருக்கிறார்கள். அவர்களின் வீரர்கள் உலகம் முழுவதும் உள்ள பல லீக் போட்டிகளில் ஆடியிருக்கிறார்கள். அதனால் மற்ற அணிகளைப் போலவே அயர்லாந்தும் சவாலளிக்கக்கூடிய அணியாகத்தான் இருக்கும்.’ எனப் பேசிமுடித்தார்.