சூர்யா, ‘சிறுத்தை’ சிவா கூட்டணியின் ‘கங்குவா’ படத்தின் கிராபிக்ஸ் பணிகள் இரவு பகல் பாராமல் மும்முரமாக நடந்து வருகின்றன.
இயக்குநர்கள் வெற்றிமாறன், ரவிக்குமார், லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ், த.செ.ஞானவேல் என சூர்யாவின் லைன் அப்கள் பிரமாண்டமாக உள்ளன. இதில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படம், அறிவிக்கப்பட்டு ஷூட்டிங்கும் தொடங்கிவிட்டது. படப்பிடிப்பு நிலவரம் குறித்து விசாரிக்கையில் கிடைத்தவை இனி..

கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம், அவரது 44வது படமாகும். ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ வெற்றியினால் சூர்யா – கார்த்திக் சுப்புராஜ் கூட்டணி உருவானது என எண்ணிவிட வேண்டாம். இது முழுக்க முழுக்க சூர்யாவுக்காவே எழுதப்பட்ட கதையாகும். இந்த படத்தின் தொழில்நுட்ப டீம் குறித்து தயாரிப்பு தரப்பு ஏற்கெனவே அறிவித்து விட்டனர். கார்த்திக் சுப்புராஜின் ஆஸ்தான கலைஞர்களும் இதில் இணைந்துள்ளனர். ‘சூர்யா 44’ படத்தின் ஷூட்டிங் அந்தமானில் நடந்து வருகிறது. கடந்த 2ம் தேதி தொடங்கிய படப்பிடிப்பு, அந்தமானின் பல பகுதிகளிலும் சீறிப்பாய்ந்து போய்க் கொண்டிருக்கின்றன.

இந்தப் படத்தில் சூர்யாவின் ஜோடியாக பூஜா ஹெக்டே, மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன் எனப் பலரும் நடிக்கின்றனர். அந்தமானில் ஃபைட் மாஸ்டர் கீசா காம்பக்டீ (kecha khampakdee)யின் அதிரடி சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்த ஃபைட் மாஸ்டர் இதற்கு முன் முருகதாஸின் ‘துப்பாக்கி, அட்லியின் ‘ஜவான்’ ஆகிய படங்களில் பணிபுரிந்தவர். சந்தோஷ்நாராயணனின் இசையில் ஒரு பாடலும் விரைவில் ஷூட் செய்கின்றனர். சூர்யாவின் அந்தமான் ஷெட்யூல் தொடர்ந்து 30 நாட்கள் அங்கே நடக்கின்றன.

அந்தமான் ஷெட்யூலை தொடர்ந்து சென்னையில் படப்பிடிப்பு நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். இம்மாத இறுதியில் படத்தின் டைட்டிலையும், அடுத்த மாதம் அதாவது ஜூலை 23ம் தேதி சூர்யாவின் பிறந்த நாள் வருவதால் அன்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோவையும் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். அன்றே ‘கங்குவா’ படத்தின் பிரமிப்பூட்டும் மேக்கிங் வீடியோ ஒன்றும் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்கிறார்கள்.