கிரியேட்டிவ் சேவையில் முக்கிய அங்கம் வகிப்பது பொழுதுபோக்குத் துறையே (Entertainment Industry). அந்தத் துறையின் உச்சமாக இருப்பது திரைப்பட உலகம். அந்தத் திரைப்படத் துறையைச் சார்ந்தோர் உலகம் முழுவதிலும் இருந்தும் தமிழ்நாட்டுக்கு வந்து, தங்களுக்கான சேவைகளைப் பெற்று, திரும்பும் சூழலை உருவாக்குவதால், அதற்கென சில உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதும் இன்றியமையாததாகிவிடுகிறது.
குறிப்பாக, சாலைக் கட்டமைப்பு வசதி (Road Infrastructure), நட்சத்திர விடுதிகளுக்கான கட்டமைப்பு வசதி (Hotel Infrastructure), நவீன வசதிகளுடன் கூடிய விமான நிலையம், துணை நகரங்களுக்கிடையே ஹெலிகாப்டர் சேவை, தேவைக்கேற்ப ஹெலிபேட்ஸ். சென்னையில் ஹெலி பேட்ஸ் வசதிகள் போதுமான அளவுக்கு இல்லை. 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் ஹெலி பேட்ஸ் அமைக்கலாம். அதேபோல மெட்ரோ பேஸ் 1, பேஸ் 2 சேவைகள் சிறப்பாக உள்ளன. அதன் தொடர்ச்சியான பேஸ் 3 இன்னும் மேம்படுத்தப்படுத்தப்பட வேண்டும்.
பல்வேறு நாடுகளிலிருந்து வரும், பொழுதுபோக்குத் துறையில் பிரபலமாக உள்ளோரின் விருப்பம் மாறுபட்டதாக இருக்கும். அவர்களுக்கு ஏற்ற தங்கும் வசதிகளை (Housing Infrastructure) மேம்படுத்தி தருவது இன்றியமையாதது. உதாரணத்துக்கு, சென்னையில் குறிப்பிட்ட சில இடங்களில் கடற்கரையை ஒட்டி அனைத்து வசதிகளுடன் கூடிய சர்வதேச தரத்திலான அடுக்குமாடி குடியிருப்புகளை தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் உருவாக்கியிருக்கின்றன. அங்கு 24X7 நேரமும் பாதுகாப்பு வசதிகள், பூங்கா, உடற்பயிற்சிக் கூடம், தரமான உணவகம், நீச்சல் குளம் உள்ளிட்டவற்றை இருக்கின்றன. அதுபோன்று கட்டமைப்புகள் அதிகளவில் உருவாக்கப்ப்ட வேண்டும். அதேபோன்று, அவர்கள் தங்கள் ஓய்வு நேரத்தைச் செலவிட சர்வதேச தரத்திலான வணிக வளாகங்கள் ஏற்படுத்த வேண்டும். உதாரணத்துக்கு, துபாய் நாட்டில் உள்ள துபாய் மால் (Dubai Mall) போன்று மூன்று, நான்காவது சென்னையில் கட்டப்பட வேண்டும். மேலும், 24X7 நேரமும் பெட்ரோல், டீசல் போன்றவற்றின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பெட்ரோல் நிலையங்கள் திறந்திருக்க வேண்டும்.
இந்திய அளவில் பெண்களுக்குப் பாதுகாப்பான நகரம் என்றால் அது சென்னை தான். அத்துடன் 24X7 நேர பாதுகாப்பு அவசியம். அதற்கு, காவல்துறையை மேலும் நவீனமயமாக்குவதோடு, சிசிடிவி கேமிராக்களை அதிகரிக்க வேண்டும். காவலர்களுக்குத் தேவையான நவீன தொழில்நுட்ப பயிற்சி அளித்து, மேம்படுத்துவதும் முக்கியமானது.
உலகளாவிய வாடிக்கையாளர்கள் சென்னைக்கு வர வேண்டுமென்றால், அவர்களுக்கேற்ற வாழ்க்கை தர மேம்பாட்டை அளிப்பது அவசியமானது. சென்னையிலுள்ள மெரினா கடற்கரை, ஆசியாவிலேயே மிக நீண்ட கடற்கரை என்ற பெயரைப் பெற்றுள்ளது. அதே போன்று, பெசன்ட் நகர் கடற்கரை உள்ளது. இவை இரண்டின் தரத்தை கூட்டி, மேம்படுத்த வேண்டும். மேலும், குழிப்பந்தாட்டம் ஆடும் மைதானங்கள் (Golf Course) போதுமான அளவிற்கு சென்னையில் இல்லை. மேலைநாட்டினர் பெரும்பாலும் குழிப்பந்தாட்டங்களை விரும்பி, ஆடுவர். அந்த மைதானங்களை நீச்சல்குளம், உடற்பயிற்சி கூடம், உடை மாற்றும் அறை, தங்கும் விடுதி, உணவகம் உள்ளிட்ட வசதிகளுடன் சேர்த்து உருவாக்குவது அவசியமானது.
நவீன பாணியிலான நாடக அரங்குகளை ஏற்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் கூத்துப்பட்டறை, பரிக்ஷா, சென்னைக் கலைக்குழு போன்றவை நவீன பாணியிலான நாடகங்களை அரங்கேற்றுவதில் முக்கியமானவர்கள். இதில், கூத்துப்பட்டறை ந.முத்துசாமியும், பரிக்ஷா ஞாநியும் இப்போது நம்மிடம் இல்லை. ஆனால், சென்னைக் கலைக் குழுவை சேர்ந்த பிரளயன் இருக்கிறார். அவரைப் போன்ற நவீன நாடக ஆளுமைகள் ‘பொன்னியன் செல்வன்’ போன்ற வரலாற்று நாவல்களை நவீன நாடகங்களாக மாற்றி, நிகழ்த்த வேண்டும். அங்கே, நூற்றுக்கணக்கானோர் அமர்ந்து பார்வையிடும் வகையில் அரங்குகளை ஏற்படுத்தி தர வேண்டும்.
கூடுதலாக, சென்னையில் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் இருக்கிறது. அதை விரிவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த நூலகத்தை இன்னும் பெரியதாக கலைகளுக்கான பிரமாண்ட நூலகமாக (Media Library) மாற்றி, அமைக்க வேண்டும். சென்னை முழுக்க மைக்ரோப்ருபெர்ரி மையங்களை (Microbrewery Centre) அதிகளவில் நிறுவ வேண்டும். மைக்ரோப்ருபெர்ரி என்பது பீர் உற்பத்தி மையம் தான். அது நவீன பாணியில் அமைக்கப்பட்டிருக்கும். வழக்கமாக, பெரிய தொழிற்சாலைகளில் பீர் தயாரிக்கப்படும், அதற்கு மாற்றாக, உணவகங்களின் ஒரு பகுதியில் பீர் தயாரிப்பதே அது. பெரிய நீர்மத்தொட்டியில் (Beer Tank) பீர் தயாராகி, அது சிறு சிறு குழாய்களின் வழியே பிடித்துக்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். அதிலிருந்து பீர் பிடித்து அருந்தலாம். அது வழக்கமாக அருந்தும் பீரிலிருந்து வேறுபட்டு, மேம்பட்ட சுவையை கொண்டிருக்கும். அதுபோல, ஒயின் அருந்தும் நிகழ்ச்சிகளை (Wine Tasting Events) நடத்துவதற்கான சிறப்பு இடங்களை உருவாக்க வேண்டும்.
உலகின் மிகப் பெரிய பொழுதுபோக்கு பூங்கா, அமெரிக்காவில் உள்ள டிஸ்னிலேண்ட் (Disneyland). அதுபோல ஒன்று, சென்னையில் வேண்டும் என முன்பு வலியுறுத்தி, பேசியிருந்தேன். அது தமிழ்நாடு அரசால் இப்போது செயல்பாட்டுக்கு வர உள்ளது. அது குறித்த அறிவிப்பு, கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. அந்த வகையில் சென்னை புறநகர் பகுதியில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் டிஸ்னிலேண்ட் போன்ற தீம் பார்க் அமைய இருக்கிறது. இந்த பார்க் தனியார் பங்களிப்புடன் வரும் சில ஆண்டுகளில் முடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த தீம் பார்க்கில் அட்வென்ச்சர் ரைடிங் (Adventure Riding), செயற்கை அருவி, சர்வதேச அளவிலான கண்காட்சி, விளையாட்டு அரங்குகள் உள்ளிட்ட பல இடம் பெறவிருக்கின்றன.
ஆனால், 100 ஏக்கரில் தீம் பார்க் என்பது வெளிநாட்டிலிருந்து வருவோரை ஈர்க்க போதுமானதாக இருக்காது. அமெரிக்காவில் உள்ள டிஸ்னிலேண்ட் போலவே, மிகப் பிரமாண்டமான தீம் பார்க்கை அப்படியே சென்னைக்கு கொண்டு வர வேண்டும். அப்போதுதான் தென்கிழக்கு ஆசிய நாடுகளான சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, துபாய், ஆப்கானிஸ்தான், பாக், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளிலிருந்து தமிழ்நாட்டுக்கு வருவோரை ஈர்க்க முடியும்.
(இன்னும் காண்போம்!)