தைவான் அதிபரின் வாழ்த்துக்கு பதிலளித்த மோடி – எதிர்ப்பு தெரிவித்த சீனா

பீஜிங்,

இந்தியாவில் நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. தேர்தலில் வெற்றி பெற்றதற்காக பிரதமர் மோடிக்கு தைவான் அதிபர் லாய் சிங்-டே வாழ்த்து தெரிவித்திருந்தார். இது குறித்து ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். வேகமாக வளர்ந்து வரும் தைவான்-இந்தியா கூட்டாண்மையை மேம்படுத்துவதையும், இந்தோ-பசிபிக் பகுதியில் அமைதி, செழிப்பு, வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் பிற துறைகளில் எங்கள் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதையும் நாங்கள் எதிர்நோக்குகிறோம்” என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, “உங்கள் அன்பான வாழ்த்து செய்திக்கு நன்றி. பரஸ்பர நன்மை பயக்கும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப கூட்டாண்மையை நோக்கி நாம் பணியாற்றுவதையும், இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவதையும் எதிர்பார்க்கிறேன்” என்று பதிவிட்டிருந்தார். இந்நிலையில் பிரதமர் மோடியின் பதிலுக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து சீன வெளியுறவுத்துறை மந்திரி மாவோ நிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தைவான் பிராந்தியத்திற்கு அதிபர் கிடையாது. சீனாவுடன் ராஜதந்திர உறவுகளை கொண்டிருக்கும் நாடுகள் தைவான் அதிகாரிளுடன் மேற்கொள்ளும் அதிகாரப்பூர்வ உரையாடல்கள் அனைத்தையும் சீனா எதிர்க்கிறது.

உலகில் ஒரே ஒரு சீனா மட்டுமே உள்ளது. தைவான் பிராந்தியம் சீன குடியரசின் பிரிக்க முடியாத பகுதியாகும். ‘ஒரே சீனா கொள்கை’ என்பது சர்வதேச உறவுகள் மற்றும் நடைமுறையில் உள்ள ஒருமித்த கருத்துகள் மூலம் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட விதிமுறை ஆகும். இந்தியா தீவிர அரசியல் அர்ப்பணிப்புகளை செய்துள்ளது. தைவான் அதிகாரிகளின் அரசியல் கணக்கீடுகளை இந்தியா எதிர்க்க வேண்டும். இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு சீனா எதிர்ப்பு தெரிவிக்கிறது” என்று கூறினார்.

தைவானில் கடந்த மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அங்குள்ள ஜனநாயக முற்போக்கு கட்சியைச் சேர்ந்த 64 வயதான லாய் சிங்-டே வெற்றி பெற்று அதிபராக பதவியேற்றார். தனது பதவியேற்பு விழாவின்போது, தைவானை அச்சுறுத்துவதை சீனா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.