புதுடெல்லி,
நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 4-ம் தேதி எண்ணப்பட்டன. மத்தியில் ஆட்சியமைக்க 272 தொகுதிகளை கைப்பற்றவேண்டிய நிலையில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளை கைப்பற்றியது.
இதில் பா.ஜ.க. 240 தொகுதிகளை கைப்பற்றியது. கூட்டணியில் இடம்பெற்றிருந்த தெலுங்கு தேசம் 16 தொகுதிகளையும், ஐக்கிய ஜனதாதளம் 12 தொகுதிகளையும் கைப்பற்றின. தேர்தலில் பா.ஜ.க.வுக்கு தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பா.ஜ.க. ஆட்சி அமைக்கிறது.
இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள், கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் பழைய நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற குழு தலைவராக மோடி ஒருமனதாக தேர்வுசெய்யப்பட்டார். இதையடுத்து பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் ஆதரவு கடிதங்களை வழங்கினர்.
இதையடுத்து ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்த மோடி ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதையடுத்து 3-வது முறையாக ஆட்சி அமைக்க மோடிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு அழைப்பு விடுத்தார். இந்த நிலையில் நாளை மறுநாள் இரவு 7.15 மணிக்கு பிரதமர் பதவி பிரமாணம் நடைபெறும் என்று ஜனாதிபதி மாளிகை அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஜூன் 9-ந்தேதி இரவு 7.15 மணிக்கு, ஜனாதிபதி மாளிகையில் பிரதமர் மற்றும் மத்திய மந்திரிகளுக்கு ஜனாதிபதி பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைப்பார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.