பெங்களூரு: பாஜக தொடர்ந்த அவதூறு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
கடந்த வருடம் கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் நடந்தபோது காங்கிரஸ் சார்பில் நாளிதழ்களில் பாஜக ஆட்சியை விமர்சித்து விளம்பரம் வெளியிடப்பட்டது. அதில், 2019 – 23 வரையிலான கர்நாடக பாஜக ஆட்சியில் ஊழல் நடந்தது என்றும் பாஜகவினர் ஊழல்வாதிகள் என்று விமர்சித்தும் கர்நாடகாவின் முக்கிய நாளிதழ்களில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கர்நாடக பாஜக ராகுல் காந்தி, கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தது.
பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இந்த அவதூறு வழக்கில் ஏற்கனவே கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் ஜாமீன் பெற்ற நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராக ராகுல் காந்தி பெங்களூரு வந்தார். அவரை முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் வரவேற்றனர்.
பின்னர், பெங்களூருவில் உள்ள சிட்டி சிவில் நீதிமன்றத்தில் அவர் ஆஜரானார். தொடர்ந்து, நீதிபதிகள் அவருக்கு ஜாமீன் வழங்கினர். இதே வழக்கில் ஜூன் 1 ஆம் தேதி, பாஜக கர்நாடக பிரிவு, ராகுல் காந்திக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால், கர்நாடகாவில் வெளியிடப்பட்ட கட்சி விளம்பரங்களில் ராகுல் காந்திக்கு தொடர்பில்லை என காங்கிரஸ் வாதிட்டது. அன்றைய தினம் ராகுல் ஆஜராகாத நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) ஆஜரானார். இதனை தொடர்ந்தே அவருக்கு தற்போது ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.