மும்பை: அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிராவின் பாராமதி தொகுதியில் போட்டியிட்ட தனது மனைவி சுனேத்ர பவாரின் தோல்வி தனக்கு அதிர்ச்சி அளிப்பதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.
“தேர்தலில் நாங்கள் எதிர்பார்த்த முடிவினை எங்களால் பெற முடியவில்லை. மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் மகிழ்ச்சி தரவில்லை. இதற்கு நான் முழு பொறுப்பேற்றுக் கொள்கிறேன். அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களும் என்னுடன் தான் உள்ளனர்.
மற்ற அனைத்து தொகுதிகளை காட்டிலும் பாராமதியில் எங்களுக்கு வாக்கு கிடைக்காதது எனக்கு பெரிய அளவில் அதிர்ச்சியாக அமைந்தது. எனக்கு ஏன் மக்கள் ஆதரவு தரவில்லை என்பது தெரியவில்லை. பொதுவெளியில் குடும்பம் குறித்து பேச வேண்டியது இல்லை என நான் கருதுகிறேன். எங்களுக்கு இஸ்லாமிய மக்களின் வாக்கு கிடைக்கவில்லை. வரும் நாட்களில் நாங்கள் வலுவான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது” என அஜித் பவார் தெரிவித்தார். தனது கட்சி எம்.எல்.ஏ-க்களுடனான கூட்டத்துக்கு பிறகு அவர் இதனை தெரிவித்தார்.
கடந்த ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் ஆளும் சிவசேனா (ஷிண்டே பிரிவு) – பாஜக கூட்டணியில் இணைந்தார் அஜித் பவார். அவர் மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்வராகவும் பதவியேற்றுக் கொண்டார். அதன் பிறகு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை அஜித் பவார் தான் பயன்படுத்த முடியும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
புதிய சின்னத்தை சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத்சந்திர பவார் அணி) பெற்றது. அஜித் பவார் அணி தேசிய ஜனநாயக கூட்டணியிலும், சரத் பவார் அணி இண்டியா கூட்டணியிலும் நின்று தேர்தலை எதிர்கொண்டது. இதில் பாராமதி தொகுதியை இருவரும் பெற்றனர். அஜித் பவார் தனது மனைவி சுனேத்ர பவாரை வேட்பாளராக அறிவித்தார். சரத் பவார் தனது மகள் சுப்ரியா சுலேவை வேட்பாளராக அறிவித்தார். இதில் சுப்ரியா வெற்றி பெற்றார். அஜித் பவார் அணி நான்கு தொகுதிகளில் போட்டியிட்டு ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றது.