யாழ் மாவட்டத்தில் 2024 ஜனவரி முதல் இன்றுவரை 4729 பேர் டெங்குநோயினால் பாதிப்பு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் புள்ளிவிபரங்களின் அடிப்படையில் 2024 ஜனவரி முதல் இன்றுவரை 4729 பேர் டெங்குநோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்குநோயை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் யாழ் மாவட்ட செயலககேட்போர் கூடத்தில் நேற்று (06) இடம்பெற்ற போதே இவ்வாறு குறிப்பிடப்பட்டது.

மரணம் ஒன்று பதிவாகியுள்ளதாகவும், முன்னைய வருடங்களுடன் ஒப்பிடும் போது இவ் அரையாண்டில் டெங்குநோயாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன் இதன்போது தெரிவித்தார்.

மக்களிடத்து விழிப்புணர்வினை ஏற்படுத்துவதோடு மட்டுமில்லாது
வலயக்கல்வி பணிப்பாளர்கள் ,பாடசாலை அதிபர்களுடனும் கலந்துரையாடி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு அவர்களை வளப்படுத்த வேண்டும்.

அனைத்து துறைசார் அதிகாரிகளும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் எதிர்காலத்தில் டெங்குநோய் பரவுவதை கட்டுப்படுத்த முடியும் என்றும் குறிப்பிடார்.

மேலும் எதிர்வரும் யூலை மாதம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள கிராம மட்ட டெங்கு கட்டுப்பாட்டு குழுக்களை ஸ்திரப்படுத்தி அதன் மூலம் கிராமிய மட்டத்தில் விழிப்புணர்வு சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதேச செயலாளர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

அந்த ஒருமாத காலப்பகுதியில் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம சேவையாளர்கள் பிரிவிலும் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் கூட்டங்கள் நிகழ்த்துவதன் மூலமாக மக்களிடத்தே விழிப்புணர்வுகளை ஏற்படுத்த முடியும் எனவும் தெரிவித்திருந்தார்.

கிணறுகளில் காணப்படுகின்ற குடம்பிகளை கட்டுப்படுத்த குடம்பிகளை உண்ணும் மீன்களை கிணற்றினுள் விடுதல், வீட்டுகழிவுகள் வீதிகளில் கொட்டப்படுவதை கட்டுப்படுத்தல், கழிவுகளை தரம் பிரித்து கழிவு தொட்டிகளில் போடுவதை ஊக்குவித்தல் மற்றும் பாடசாலை மாணவர்கள் மட்டத்தில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளல், பிளாஸ்டிக் கழிவுகளை (போத்தல்) பொது இடங்களில் சேகரிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தல் போன்றவிடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.