கமல் சந்ரா இயக்கத்தில் அனு கபூர், அஷ்வினி, மனோஷ் ஜோஷி, ராகுல் உள்ளிடோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தித் திரைப்படம் `Hamare Baarah’.
மன்சூர் அலிகான் சஞ்சரி என்பவரின் முதல் மனைவி பிரசவத்தின்போது உயிரிழந்து விடுகிறார். பிறகு, இரண்டாவது திருமணம் செய்துகொள்கிறார் மன்சூர். இரண்டாவது மனைவிக்கு ஐந்து குழந்தைகள் பிறக்க, மீண்டும் ஆறாவது முறையாகக் கருவுறுகிறார். ஆனால், இந்தக் கருவைக் கலைக்கவில்லை என்றால் மனைவியின் உயிருக்கே ஆபத்து என்ற நிலை வருகிறது. இருப்பினும், கருவைக் கலைப்பதற்கு மன்சூர் அலிகான் சஞ்சரி ஒத்துக் கொள்ளாமல் மனைவியைக் கொடுமைப்படுத்துகிறார். இதனால் கரு கலைக்கும் உரிமை பெண்களுக்கு உண்டு என்று மன்சூர் அலிகான் சஞ்சரியின் மகள், அம்மாவிற்கு ஆதரவாக அப்பாவின் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கிறார். இது தொடர்பாக நீதிமன்றத்தில் நடக்கும் விவாதங்கள்தான் இத்திரைப்படத்தின் கதைக்களம்.

இத்திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானபோதே இத்திரைப்படம் இஸ்லாமிய மார்க்கத்தை இழிவுபடுத்துகிறது என்று பலரும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர். “மத அடிப்படைவாதியாகச் சித்திரிக்கப்பட்டுள்ள மன்சூர் அலிகான் சஞ்சரி, கருவைக் கலைப்பது ஹராம் என்பதால் மனைவியைக் கொடுமைப்படுத்துகிறார்” என்றும் “குழந்தைகள் பெற்றுக் கொடுக்கும் மிஷினாக பெண்கள் பயன்படுத்தப்படுகிறார்கள்” என்றும் பல்வேறு சர்ச்சைகள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளதாக எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
மேலும், இஸ்லாமியர்கள் தங்கள் மதத்தை விரிவுபடுத்துவதற்காக அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள மனைவியைக் கொடுமைப்படுத்துகிறார்கள் என்று சொல்வதன் மூலம் இஸ்லாமிய வெறுப்புணர்வும் அவர்களைத் தவறான கண்ணோட்டத்தில் காட்டும் நோக்கமும் இருப்பதாகப் பலரும் இதற்குக் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இத்திரைப்படம் இன்று ஜூன் 7ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில் இஸ்லாமிய மார்க்கத்தை இழிவுபடுத்தி, சமூக நல்லிணக்கத்திற்கு எதிராக வெறுப்புணர்வுடன் எடுக்கப்பட்டிருக்கும் இந்த ‘Hamare Baarah’ திரைப்படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று கர்நாடகாவில் இருக்கும் சமூக ஆர்வலர் அமைப்புகள் மற்றும் சிறுபான்மை அமைப்புகள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்து போராட்டம் நடத்தின.

இந்நிலையில் சமூக நல்லிணக்கத்தைக் கருத்தில் கொண்டு கர்நாடக அரசு, இரண்டு வாரங்கள் அல்லது இது குறித்து அரசு தரப்பிலிருந்து அடுத்த அறிவிப்பு வரும் வரையிலும் ‘Hamare Baarah’ திரைப்படத்தைத் திரையரங்குகளில் திரையிடுவதற்குத் தடை விதித்துள்ளது.