போக்குவரத்துக் காவல்துறை அதிகாரிகளெல்லாம் சட்டம் ஒழுங்குக் காவல்துறை அதிகாரிகளாக மாறி, வாகன ஓட்டிகளிடம் பல பல குற்றங்களை முன்னிறுத்தி பைசா வசூலிப்பது இப்போது நடந்து கொண்டுதான் இருக்கிறது.
போக்குவரத்துக் காவல்துறையே இப்படி என்றால், சட்டம் ஒழுங்குக் காவல்துறையைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.
என்னதான் – ANPR (Automated Number Plate Registration) கேமராக்கள், செயற்கை நுண்ணறிவுத் திறன் கொண்ட AI கேமராக்கள் என்று பல்வேறு தொழில்நுட்பங்கள் கொண்டு வாகன ஓட்டிகள் பிடிபட்டாலும், பழைய ஸ்டைலில் வாகன ஓட்டிகளை வளைவுகளில் மறைந்திருந்து வளைத்துப் பிடித்து நிறுத்தி, காவல்துறை பணம் பறிப்பது இன்னும் நடந்து கொண்டுதான். அதுவும், இரவு நேரங்களில் சும்மா போகும் வாகன ஓட்டிகளிடம் வசூல் வேட்டையில் ஈடுபடுவது மிகவும் கேஷுவலான விஷயமாகி விட்டது.
இப்படிக் காவல்துறை அதிகாரிகள், தணிக்கை என்கிற பெயரில் வாகன ஓட்டிகளிடம் பணவேட்டையில் ஈடுபடுவதாகப் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததை ஒட்டி, சாலைகளில் தணிக்கை செய்யும் போக்குவரத்துக் காவல்துறைக்கும் ஒரு சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது என்பது சந்தோஷமான விஷயம். இதில் ஒரு சோகமான விஷயம் – இந்தச் சட்ட நடைமுறை நம் தமிழ்நாட்டில் இல்லை. ஹரியானா மாநிலம் Gurugram காவல்துறைக்குத்தான் ஓர் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
அதாவது – இனிமேல் இரவு நேரங்களில் தேவையானால் தவிர சும்மா சும்மா தணிக்கை என்கிற பெயரில் அப்பாவி வாகன ஓட்டிகளைத் தொந்தரவு செய்யக் கூடாது; அபராதமும் விதிக்கக் கூடாது. இப்படி ஓர் அதிரடி உத்தரவால் – ஹரியானா போக்குவரத்துக் காவல்துறை கொஞ்சம் டல் அடித்திருப்பார்கள்.
ஹரியானா Deputy Commissioner of Police (DCP), வீரேந்திர விஜ் இந்த அறிக்கையில் மேலும் இப்படிச் சொல்லியிருக்கிறார். அதாவது – அப்பாவி வாகன ஓட்டிகளை நிறுத்தி ஸ்பாட்டில் கீழ்நிலை காவல்துறை அதிகாரிகள் யாரும் அபராதம் வசூலிக்கக் கூடாது. இதை அந்தந்தப் பகுதி இன்ஸ்பெக்டர்கள் உறுதி செய்ய வேண்டும். அதையும் மீறி ஒருவேளை தவிர்க்க முடியாத சூழ்நிலையால் அபராதம் போட நேர்ந்தால், அதை உடனே கெஸட் அதிகாரிகள் அல்லது நோட்டீஸில் கையெழுத்திடத் தகுதிபெற்ற உயர் அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு வந்தபிறகுதான் அபராதம் போட வேண்டும். அதேவேளை, இரவு நேரங்களில் Drunk and Drive வழக்குகள் வந்தால், அதில் கடுமை காட்டத் தவற வேண்டாம். இதை மீறும் எந்தக் காவல்துறை அதிகாரியாக இருந்தாலும், கடுமையான நடவடிக்கைக்கு ஆளாக வேண்டியிருக்கும் என்று எச்சரித்திருக்கிறார்.
‛அடடா, நம்ம ஊருக்கு எப்போ இப்படி ஒரு சட்டமும் கமிஷனரும் வருவாங்க’னு ஏங்குகிற உங்க மைண்ட் வாய்ஸ் நல்லாவே கேட்குது. அப்படியே தமிழ்நாட்டுக்குத் தூக்கிட்டு வாங்கப்பா அந்த ஹரியானா கமிஷனர் செல்லத்தை!