• பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் புதிய சுற்று நிருபங்களின் பிரகாரம் பணியாற்றப்படும்.
சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் பழைய சுற்று நிருபங்களுக்கு அப்பாற்பட்டு புதிய சுற்று நிருபங்களின் பிரகாரம் செயற்படுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கடுவெல பிரதேச மக்களின் நலன்களை ஆராய்வதற்காகவும், அந்த மக்களுக்கான நிவாரண வேலைத்திட்டம் தொடர்பில் ஆராய்வதற்காகவும் இன்று (08) கண்காணிப்பு விஜயத்தில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
வெள்ளம் வடிந்ததன் பின்னர் மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வேலைத்திட்டத்தை பார்வையிட்டதுடன், மக்களை மீள்குடியேற்றுவதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்குமாறு சாகல ரத்நாயக்க, அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியிலுள்ள வீடுகளைப் பார்வையிட்ட சாகல ரத்நாயக்க, வீட்டு உரிமையாளர்களுடன் உரையாடலில் ஈடுபட்டதுடன், எதிர்காலத்தில் இவ்வாறான வெள்ள நிலைமையைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடினார்.
இதேவேளை, கடுவெல வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ ரன்கடு பத்தினி விகாரை வளாகத்தில் வெளிநாட்டு வைத்தியக் குழுவின் பங்குபற்றுதலுடன் நடைபெறும் வைத்திய முகாமையும் சாகல ரத்நாயக்க பார்வையிட்டார்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த சாகல ரத்நாயக்க மேலும் கூறியதாவது,
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். அவர் வழங்கிய அறிவுறுத்தல்களின்படி அவ்வப்போது பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று வருகிறோம். மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியை வினைத்திறனாக்க தேவையான தீர்மானங்களை எடுக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கியுள்ளோம்.
அத்தகைய முடிவுகளை எடுக்க முடியாத சந்தர்ப்பங்களில், இறுதி முடிவை எடுக்க மேல்முறையீட்டுக் குழுவிடம் சமர்ப்பித்து இறுதித் தீர்மானம் எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் செயற்பாடுகள் அனைத்தும் பாதிக்கப்பட்ட மக்கள் விரைவில் தமது இயல்பு வாழ்வுக்குத் திரும்புவதற்குத் தேவையான பின்னணியை வழங்கவே எதிர்பார்க்கின்றோம். நம் நாட்டில் பல சம்பள முரண்பாடுகள் உருவாகியுள்ளன.
ஒழுங்குமுறையில் சம்பள ஏற்பாடுகள் செய்யாததாலும், பல்வேறு காலகட்டங்களில் துரித பதில்களை வழங்க நடவடிக்கை எடுத்தமையும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. சம்பள முரண்பாடு குறித்து முறையான ஆய்வு நடத்தி அறிக்கை தயாரிக்க கடந்த அமைச்சரவையில் அங்கீகாரம் அளிக்கப்பட்டது. அந்த நடவடிக்கைகள் எதிர்காலத்தில் நடைபெறும்.
ஆனால் இது மக்கள் சிரமப்படும் சந்தர்ப்பம். நாடு பெரும் பொருளாதார சிக்கலை எதிர்கொண்டு, மீண்டும் பொருளாதார ரீதியில் ஸ்திர நிலைமையை அடைந்திருந்தாலும், அனைவரும் அவதானமாக இருக்க வேண்டும். எனவே, வேலைநிறுத்தம் செய்வதற்கு இது சரியான நேரம் அல்ல. அனைத்து அரச அதிகாரிகளும் இந்த உண்மைகளைப் புரிந்து கொண்டு செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் பிரச்சினைகளை நாம் ஒருபோதும் புறக்கணிக்க மாட்டோம். அதுபற்றிய புரிதல் எமக்கு உள்ளதுடன் அவற்றைத் தீர்ப்பதற்குத் தேவையான வேலைத் திட்டத்தையும் தயாரித்துள்ளோம்.” என்று சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி. தொலவத்த மற்றும் கடுவெல பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்கள் உட்பட அரசியல் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டனர்.