புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற கட்சித் தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் நடந்த காங்கிரஸ் எம்பிக்கள் கூட்டத்தில் சோனியா காந்தியை தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற கட்சித் தலைவராக சோனியாவின் பெயரை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே முன்மொழிந்தார். தொடர்ந்து கௌரவ் கோகோய், தாரிக் அன்வர் மற்றும் கே சுதாகரன் ஆகியோர் ஆதரவு அளிக்க, ஏகமனதாக காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற கட்சித் தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் டெல்லியில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால், ப.சிதம்பரம், அம்பிகா சோனி, பிரியங்கா காந்தி, ஜெயராம் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், துணைத் தலைவர், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல்களை எதிர்கொள்ளுதல், கூட்டணிக் கட்சிகளுடன் இணக்கமான போக்கைக் கடைபிடிப்பது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
அந்த வரிசையில் முக்கிய முடிவாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற கட்சித் தலைவராக சோனியா காந்தியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த கே.சி.வேணுகோபால், “மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பை ராகுல் காந்தி ஏற்க வேண்டும் என காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தக் கூட்டணியை மக்களவையில் வழிநடத்திச் செல்ல ராகுல் காந்தி சிறந்த தேர்வாக இருப்பார்” என்று கூறினார்.
அப்போது, ராகுல் காந்தி இந்த முடிவை ஏற்றுக் கொள்வாரா எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கே.சி.வேணுகோபால், “ராகுல் காந்தி இதன் மீது விரைவில் முடிவெடுப்பார்” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “காங்கிரஸ் கட்சி மீண்டும் எழுச்சி காணத் தொடங்கியுள்ளது. காங்கிரஸ் காரிய கமிட்டியில் 4 மாதங்களுக்கு முன்னால் இருந்த நிலைமை தற்போது முற்றிலுமாக மாறிவிட்டது” என்றார்.