அக்கட தேசமான ஆந்திராவில் மிகப் பெரிய பாரம்பரியம் கொண்டது தெலுங்கு தேசம் கட்சி. 2019 சட்டப்பேரவை தேர்தலில் இதுவரை சந்திக்காத சரிவாக 23 சீட் மட்டுமே அக்கட்சி வெல்ல, “இனி தெலுங்கு தேசம் கட்சிக்கும், சந்திரபாபு நாயுடுவுக்கு எதிர்காலம் இல்லை” என்று ஜெகன் மோகன் ரெட்டியின் எழுச்சியை மையப்படுத்தி டிடிபி-க்கு முடிவுரை எழுதினார்கள் அரசியல் வல்லுநர்கள்.
சரியாக ஐந்து வருடங்கள் கழித்து 2024 சட்டப்பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் உள்ள 175 பேரவைத் தொகுதிகளில் 165 தொகுதிகளில் தெலுங்கு தேசம் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. 4-வது முறையாக ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்க உள்ளார். இதன் பின்னணியில் உள்ளவர்களில் முக்கியமானவர் 41 வயதான நர லோகேஷ். வரலாற்று வெற்றிக்காக பாஜக மற்றும் பவன் கல்யாணின் ஜனசேனாவின் தேர்தலுக்கு முந்தைய கூட்டணியை அமைத்தற்காக சந்திரபாபு நாயுடுவை பலர் பாராட்டினாலும், அதைத் தாண்டி இந்த வெற்றியில் சந்திரபாபு நாயுடுவின் மகன் நர லோகேஷின் பங்கு அளப்பரியது.
என்ன செய்தார் நர லோகேஷ்? – ஜனவரி 2023-ல் இருந்து இதனை தொடங்கலாம். சரியாக 2023 ஜனவரியில் தனது தந்தையின் குப்பம் தொகுதியில் இருந்து இச்சாபுரம் வரை 4000 கிமீ பாதயாத்திரையை தொடங்கினார் நர லோகேஷ். இந்த யாத்திரைக்கு அவர் வைத்த பெயர், ‘யுவ காலம் பாத யாத்திரை’ (Yuva Galam Padayatra). வடக்கே ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்றால், இங்கே நர லோகேஷின் ‘யுவ காலம் பாத யாத்திரை’. இந்த யாத்திரையின் நோக்கம் ஆந்திரப் பிரதேச இளைஞர்களுடன் இணைப்பை ஏற்படுத்துவதும், தெலுங்கு தேசத்தை மீண்டும் மக்கள் மத்தியில் கொண்டுசெல்வதும்தான்.
பாத யாத்திரை அரசியல் ஆந்திராவுக்கு ஒன்றும் புதிது கிடையாது. சொல்லப்போனால், பாத யாத்திரைகளால் தான் ஆந்திர அரசியல் களம் அவ்வப்போது மாற்றம் பெறுகிறது. அப்படியான மாற்றத்துக்காக 400 நாட்களில் 4000 கிமீ பாதயாத்திரை மேற்கொண்டார் நர லோகேஷ். அவர் நினைத்தது நடக்கத் தொடங்கியது. தெலுங்கு தேசத்தின் கொள்கைகள் மற்றும் இலக்குகளை வெளிப்படுத்த யாத்திரை அடித்தளம் அமைத்து கொடுத்தது. அதனைப் பயன்படுத்தி கொண்ட நர லோகேஷ், அதனுடன் ஜெகனின் காழ்ப்புணர்ச்சி அரசியலை மக்கள் மத்தியில் வெளிப்படுத்தவும் யாத்திரையை பயன்படுத்திக் கொண்டார்.
இதனைத் தாண்டி, யாத்திரையில் சந்திக்கும் மக்கள் கூறும் பிரச்சினைகளை காகிதத்தில் ஆர்வத்துடன் குறித்துக் கொள்வது, வயத்தில் மூத்தவர்களை கட்டியணைப்பது, இளைஞர்களுடன் செல்பி எழுப்புவது, அவர்களுடன் நட்பாக பழகுவது என மக்களை கவரும் நடவடிக்கைகளிலும் குறைவைக்கவில்லை அவர். இதனால், எதிர்பார்த்ததைவிட அவருக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது.
“மக்களின் உண்மையான பிரச்சினைகளை நர லோகேஷுக்கு யாத்திரை உணர்த்தியிருக்கும் என்று நான் நம்புகிறேன்.” – இது யாத்திரையின் 100வது நாளில் சந்திரபாபு நாயுடு சொன்னது. அவர் சொன்னது நிதர்சனமானது. பாரத் ஜோடோ யாத்திரை ராகுல் காந்தியை பற்றிய மக்கள் எண்ணங்களை எப்படி மாற்றியதோ, அதேபோல் யுவ கலாம் பாத யாத்திரை நர லோகேஷ் பற்றிய எண்ணங்களை மக்கள் மத்தியில் மாற்றியது.
ஆனால், இதுவரை நடந்தது ட்ரெய்லர்தான் என்கிற ரீதியில், சந்திரபாபு நாயுடுவின் கைது நர லோகேஷின் அரசியல் கரியரை வேறு ஒரு தளத்துக்கு எடுத்துச் சென்றது. குறிப்பாக கட்சியில் அவரின் அந்தஸ்தும், அவரின் தலைமை பண்பும் இந்த காலகட்டத்திலேயே உயர்ந்தது. திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் திடீரென ஒரு நாள் அதிகாலை சந்திரபாபு நாயுடுவை கைது செய்தது ஜெகன் அரசு. யாத்திரையில் இருந்த லோகேஷ் அதனை ரத்து செய்துவிட்டு தந்தையை காக்க பறந்தார். தந்தைக்காக நீதிமன்ற படிக்கட்டுகள் ஏறிய அதே வேளையில், கட்சியின் தலைமையை ஏற்று, கட்சிப் பணிகளை ஒற்றை ஆளாக கவனித்துக் கொண்டு, கைதுக்கு நியாயம் கோரி மக்கள் மன்றத்தையும் நாடினார்.
மாநிலம் முழுவதும் தொண்டர்களை ஒருங்கிணைந்து போராட்டத்தை முன்னெடுத்தார். இந்த சமயங்களில் நடந்தக் கூட்டங்களில் லோகேஷ் முழுங்கியது அத்தனையும் தீப்பொறி. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது, ஊழல்கள் என ஜெகனின் அரசை கிடைக்கும் கேப்பில் எல்லாம் வறுத்தெடுத்த அவர், ஜெகனின் பழிவாங்கும் அரசியலுக்காக ஒருகட்டத்தில் அவரை ‘சைக்கோ ஜெகன்’ என்று முழங்கினார். இப்படியாக சந்திரபாபு நாயுடுவின் கைதுக்கான அனுதாபத்தையும், ஜெகன் ஆட்சியின் தவறுகளையும் தனது முழக்கம் மூலம் பெற தவறவில்லை.
மறுபக்கம், கட்சியின் கட்டமைப்பை இந்த சமயத்தை பயன்படுத்தி வலுப்படுத்தினார். டிஜிட்டல் உறுப்பினர் சேர்க்கை என விதவிதமான நடவடிக்கைகளால் சந்திரபாபு நாயுடு இல்லாத குறையை கொடுக்காமல், கட்சித் தொண்டர்களை தளரவிடாமல் செயல்பட்டு தலைமை பண்பில் முத்திரை பதித்தார். இக்காலகட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தவர்கள் மட்டும் 50 லட்சம் என்கிறது டிடிபி. சிறையில் இருந்து சந்திரபாபு நாயுடு வெளிவந்ததும் மீண்டும் பாதயாத்திரை தொடங்கப்பட்டது. விட்டதை துரத்தி பிடித்து யாத்திரை மூலம் தெலுங்கு தேசம் கட்சியை மீண்டும் மக்களுடன் இணைந்து புத்துயிர் கொடுத்தார்.
காலம் கனிய ஜனசேனா, பாஜக உடன் கூட்டணி சேர்ந்தது தெலுங்கு தேசம். நர லோகேஷின் எழுச்சியால் ஆந்திரா இதுவரை கண்டிராத வெற்றி தெலுங்கு தேசதுக்கு கிடைத்தது. நடந்து முடிந்த தேர்தலில் மாநிலத்தின் மொத்த தொகுதிகளில் 91 சதவீதத்தை கைப்பற்றியது தெலுங்கு தேசம் கூட்டணியே. அன்று 23 இடங்கள் என்று இருந்த தெலுங்கு தேசத்தை 135 இடங்கள் என்ற இமாலய வெற்றியை ருசிக்க வைத்தார். ‘மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி’ என்பதுபோல், தந்தை சந்திரபாபு நாயுடுவுக்கு நான்காம் முறையாக முதல்வர் நாற்காலியை பெற்றுக்கொடுத்துள்ளார்.
இதுவரை தேர்தல் வெற்றிபெறாத நர லோகேஷ் முதல் வெற்றியாக மங்களகிரி தொகுதியில் 91 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரசை வீழ்த்தியுள்ளார். நர லோகேஷ் அரசியல் எழுச்சி யாரும் எதிர்பாராத ஒன்று. ஏனென்றால், அமெரிக்காவின் ஸ்டான்ட்போர்ட் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படிப்பு, முதல்வரின் மகன் என வாரிசு அரசியலுக்கான அத்தனை தகுதியுடன் தான் நர லோகேஷ் அரசியலில் கால் பதித்தார். என்டிஆர், சந்திரபாபு நாயுடு புண்ணியத்தால் தேர்தலில் நிற்காமலே, ஒரு வெற்றியை கூட பெறாமலேயே மாநிலத்தின் அமைச்சராக ஆக்கப்பட்டார். இது சொந்த கட்சிக்குள்ளேயே அவரை விமர்சிக்க வைத்தது. எதிர்கட்சிகளோ சொல்லவா வேண்டும், ”ஆந்திராவின் பப்பு” என கிண்டலடித்தனர்.
இந்த கிண்டல்களுக்கு எல்லாம் பதிலடியாக தற்போது, சமூக ஊடக ரீல்ஸ்களும், பதிவுகளும் “நர லோகேஷ், ஆந்திரா மற்றும் தெலுங்கு தேசத்தின் எதிர்காலம்”, “தி ரைஸ் ஆஃப் நர லோகேஷ்” என்று தற்போது நர லோகேஷை கொண்டாடி வருகின்றன. ஆந்திராவின் எதிர்காலம் என்று புகழப்படுவதுக்கு ஏற்றார் போல் தான் நர லோகேஷின் நடவடிக்கைகள் அமைந்து வருகின்றன.
பாஜக கூட்டணியில் அங்கம் வகித்தாலும், பாஜக எதிர்க்கும் இஸ்லாமிய இடஒதுக்கீடு உள்ளிட்டவற்றில் தனது ஆழமான பார்வையை வெளிப்படுத்தியுள்ள நர லோகேஷ், “வாக்கு வங்கிக்காகவோ, சமரச அரசியலுக்காகவோ முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்போவதில்லை. அவர்கள் உண்மையாகவே பொருளாதாரம் உட்பட அனைத்திலும் பின்தங்கியுள்ளனர். அவர்களது உரிமை. அரசியல் சாசனம் சொல்லியுள்ள உரிமையும் அதுதான். நிச்சயம் தெலுங்கு தேசம் இஸ்லாமியர்களின் உரிமையை பெற்றுக் கொடுக்கும்” என்று முற்போக்கு வார்த்தைகளை உதிர்த்து நம்பிக்கையை ஏற்படுத்துகிறார். அக்னிபாத் போன்ற மற்ற திட்டங்களிலும் நர லோகேஷின் பார்வையும் இப்படியே.
“யாத்திரைக்கு முந்தைய லோகேஷிலிருந்து யாத்திரைக்குப் பிந்தைய லோகேஷ் மிகவும் வித்தியாசமானவர்” – இது நர லோகேஷ் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியது. உண்மை தான். லோகேஷின் ‘ஆந்திர’ தொலைநோக்கு பார்வையையும், மக்கள் அவர் மீது கொண்டிருந்த எண்ணங்களையும், தெலுங்கு தேசத்தின் வளர்ச்சியையும் யாத்திரை மாற்றியுள்ளது.