புதுடெல்லி: போலி ஆதார் அட்டைகளுடன் டெல்லியில் உள்ள புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்குள் கடந்த ஜூன் 4-ம் தேதி ஊடுருவ முயன்ற மூன்று பேரை மத்திய தொழிலக பாதுகாப்புப் படை வீரர்கள் கைது செய்துள்ளதாக நேற்று தெரிய வந்தது. இந்த குற்றத்தில் ஈடுபட்ட மூவர்மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் கூறியதாவது:
கடந்த ஜூன் 4-ம் தேதி மதியம் 1:30 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தின் மூன்றாவது நுழைவாயில் கதவு வழியாக உள்ளே நுழைய உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த காசிம், மோனிஸ் மற்றும் சோயப் ஆகிய மூவர் முயன்றனர். அவர்களை மத்திய தொழிலக பாதுகாப்புப் படை வீரர்கள் தடுத்து நிறுத்தி அடையாள சோதனை செய்தனர். நாடாளுமன்ற கட்டிடத்தில் உள்ள எம்.பி ஓய்வறையில் கட்டிட வேலை செய்ய தாங்கள் அழைக்கப்பட்ட தாக மூவரும் கூறினர்.
அப்போது காசிம் மற்றும் மோனிஸ் இருவரும் தங்களது புகைப்படம் ஒட்டப்பட்ட போலி ஆதார் அட்டைகளை காட்டினர். இதில் மோனிஸின் ஆதார் அட்டையை வைத்துகாசிம் ஆள்மாறாட்டம் செய்ய முயல்வதாக சந்தேகம் எழுந்தது. இதையறிந்த அதிகாரிகள் உடனடியாக சந்தேக நபர்களை கைது செய்து அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தினர். அவர்கள் மீது சதி, மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின்கீழ் இந்திய தண்டனைச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய் யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டது.
மத்தியில் புதிய ஆட்சி அமையவிருக்கும் இவ்வேளையில் பலத்தபாதுகாப்பு கொண்ட நாடாளுமன்றத்துக்குள் போலி ஆவணங்களுடன் மர்ம நபர்கள் ஊடுருவ முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.