- விளையாட்டில் ஒரு புதிய யுகத்தை உருவாக்கத் தயார் – விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க.
மாத்தளை செயற்கை ஹொக்கி மைதானத்தையும் கொழும்பு ரீட் மாவத்தையில் உள்ள செயற்கை ஹொக்கி மைதானத்தையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் எதிர்வரும் ஜூலை 15ஆம் திகதிக்கு முன்னர் திறந்து வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க தெரிவித்தார்.
மேலும் ஒரு சில விளையாட்டு சம்மேளனங்களில் நிலவும் சட்ட சிக்கல்களைத் தீர்த்து விளையாட்டுத்துறையில் புதிய யுகத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க,
பல வருடங்களாக அபிவிருத்திப் பணிகள் தடைப்பட்டிருந்த கொழும்பு ரீட் மாவத்தையில் அமைந்துள்ள செயற்கை ஹொக்கி மைதானமும் மாத்தளை செயற்கை ஹொக்கி மைதானமும் நவீனமயப்படுத்தப்பட்டு வருகின்றன. அதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ஆகியோரின் பணிப்புரைக்கு அமைவாக விசேட வேலைத்திட்டம் ஒன்று அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அதன் கீழ் மாத்தளையில் உள்ள செயற்கை ஹொக்கி மைதானத்திற்கு 140 மில்லியன் ரூபாவும் கொழும்பு ரீட் மாவத்தையில் உள்ள செயற்கை ஹொக்கி மைதானத்திற்கு 160 மில்லியன் ரூபாவும் செலவிடப்பட்டுள்ளது. இதன்படி, இந்த இரண்டு ஹொக்கி மைதானங்களும் எதிர்வரும் ஜூலை மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் திறந்து வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், விளையாட்டுத்துறை அமைச்சின் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் கீழ் 67 தேசிய விளையாட்டு சம்மேளனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 05 தேசிய விளையாட்டு சம்மேளனங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
அத்துடன், இலங்கை சைக்கிளோட்ட சம்மேளனம், இலங்கை ரக்பி சம்மேளனம், இலங்கை ஓட்டோமொபைல் சம்மேளனம், இலங்கை வலைப்பந்து சம்மேளனம் ஆகியன மே 31ஆம் திகதிக்கு முன்னர் புதுப்பிக்கப்படாததால் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தச் சிக்கல்களைத் தீர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு விளையாட்டுத்துறைப் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ஷமல் பெர்னாண்டோவுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர், விசேட வர்த்தமானி மூலம் அதிகாரங்களை வழங்கியுள்ளார்.
மேலும் 03 விளையாட்டு சம்மேளனங்கள் சார்பில் கையளிக்கப்பட்ட மனுக்கள் மீதான நீதிமன்ற நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதன் மூலம் விளையாட்டுத்துறையில் புதிய யுகத்தை ஏற்படுத்த முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.
மேலும் கடந்த வரவு செலவுத் திட்டத்தில் பாடசாலை கிரிக்கெட் அபிவிருத்திக்காக ஜனாதிபதி 1.5 பில்லியன் ரூபாவை ஒதுக்கினார். இதன்படி, பாடசாலை கிரிக்கெட் சம்மேளனத்துடன் இணைந்து பாடசாலை கிரிக்கெட்டை புதிய பாதைக்கு இட்டுச்செல்லும் திட்டமும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.“ என்று தெரிவித்தார்.