புதுடெல்லி: பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா டெல்லி வந்துள்ளார்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் நாளை மாலை 6 மணி அளவில் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார். அவருடன் அவரது அமைச்சரவையும் பதவியேற்க உள்ளது. அமைச்சரவையில் இடம் பெற உள்ளவர்கள் குறித்த தொடர் ஆலோசனைகளை ஜெ.பி.நட்டா, அமித் ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.
நரேந்திர மோடி நாளை பதவியேற்க உள்ள நிலையில், டெல்லியில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடமை பாதை முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா டெல்லி வந்துள்ளார். டெல்லி விமான நிலையத்தில் அவரை வெளியுறவுத் துறை செயலர் முக்தேஷ் பர்தேசி வரவேற்றார்.
இதையடுத்து, வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பிரதமர் மற்றும் அமைச்சரவை பதவியேற்பு விழாவுக்கு முதல் சிறப்பு விருந்தினராக வங்கதேச பிரதமர் டெல்லி வந்துள்ளார். அவரை முக்தேஷ் பரதேஷி அன்புடன் வரவேற்றார். அவரது இந்த வருகையின் மூலம், இந்தியா – வங்கதேசம் இடையேயான இருதரப்பு உறவு மேலும் வலுவடையும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று ஷேக் ஹசீனா டெல்லி வந்துள்ளார்.
இதேபோல், பதவியேற்பு விழாவில் பங்கேற்க வேண்டும் என்ற பிரதமரின் அழைப்பை இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மாலத்தீவு அதிபர் முகமது மொய்சி, செசல்ஸ் துணை அதிபர் அகமது அஃபிப், மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜூக்னாத், நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் எனும் பிரசண்டா, பூட்டான் பிரதமர் ஷெரிங் தோப்கே ஆகியோர் ஏற்றுக்கொண்டிருப்பதாக இந்திய வெளியறவுத் துறை ஏற்கனவே அறிவித்துள்ளது.
அண்டை நாடுகளுக்கு முதல் முன்னுரிமை என்ற இந்திய வெளியுறவுக் கொள்கை மற்றும் சாகர் தொலைநோக்கு திட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் அண்டை நாடுகளுக்கு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவை அடுத்து சிறப்பு விருந்தினர்களுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சிறப்பு இரவு விருந்து வழங்க உள்ளார். அதில், வெளிநாட்டுத் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.