புதுடெல்லி: நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி 3-வது முறையாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) பதவியேற்க உள்ள நிலையில், அவரது அமைச்சரவை குறித்து இறுதி முடிவு எடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று (சனிக்கிழமை) நடைபெற்று வருகிறது.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 240 தொகுதிகளிலும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத அதேநேரத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்துள்ளது. இதையடுத்து, கூட்டணி கட்சிகளின் ஆதவோடு நரேந்திர மோடி மூன்றாவது முறையாக நாளை பதவியேற்க உள்ளார்.
நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கும் வாய்ப்பை மோடி பெற்றுள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக நேற்று அவர் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, எம்.பி.,க்களின் ஆதரவு கடிதத்துடன் மோடி நேற்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்தார். அப்போது, நரேந்திர மோடிக்கு இனிப்பு ஊட்டிவிட்ட திரவுபதி முர்மு, மீண்டும் பிரதமராக பதவியேற்குமாறு தெரிவித்தார்.
நாளை மாலை 6 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. அதற்குள்ளாக மோடியின் மூன்றாவது அமைச்சரவையில் இடம் பெற உள்ளவர்களின் பட்டியலை இறுதி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை இடங்கள்? அமைச்சரவையில் யார் யார் இடம்பெறுவது, யார் யாருக்கு எந்தெந்த இலாக்காக்களை ஒதுக்குவது என்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்கான தொடர் ஆலோசனைக் கூட்டங்களை பாஜக நடத்தி வருகிறது.
இது தொடர்பாக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா, மூத்த தலைவர் அமித் ஷாவை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, பாஜக அமைப்புச் செயலாளர் பி.எல். சந்தோஷ் உடனிருந்தார். இந்த சந்திப்பின்போது, ஒவ்வொரு மாநிலத்துக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கக்கூடிய வகையில் அமைச்சரவையை முடிவு செய்வது குறித்து மூவரும் ஆலோசனை மேற்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
கூட்டணியின் முக்கிய கட்சியான தெலுங்கு தேசம் சார்பில் யார் யாரை அமைச்சர்களாக நியமிக்கலாம், எந்தெந்த இலாக்காக்களை வழங்கலாம் என்பது குறித்த பரிந்துரையை சந்திரபாபு நாயுடு பாஜக தலைமைக்கு அளித்திருப்பதாகக் கூறப்படுகிறது. தெலுங்கு தேசம் கட்சிதான் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இரண்டாவது பெரிய கட்சி என்பதால் அவரது பரிந்துரையை அப்படியே ஏற்பதற்கான வாய்ப்பு இருப்பதாககக் கூறப்படுகிறது. இந்நிலையில், டெல்லியில் தங்கி இருந்த சந்திரபாபு நாயுடு, இன்று அங்கிருந்து விஜயவாடாவுக்கு புறப்பட்டுச் சென்றார்.
மக்களவைத் தேர்தலில் பாஜக 240 இடங்களைக் கைப்பற்றியது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 16 இடங்களிலும், நிதிஷ் குமாரின் ஜேடியு 12 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 7 தொகுதிகளிலும், சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி – ராம் விலாஸ் கட்சி 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.