விருதுநகர்: விருதுநகரில் உள்ள ஸ்ரீகுமரன் தங்க மாளிகை நகைக் கடையில் சனிக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மீட்புப் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையின் புகை வெளியேற்றும் கருவி பழுதானதால் கடை முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.
விருதுநகரில் மதுரை சாலையில் தீயணைப்பு நிலையத்திற்கு எதிரே ஸ்ரீகுமரன் தங்க மாளிகை நகைக்கடை உள்ளது. கடந்த ஒரு மாதத்துக்கு முன்புதான் இந்த நகைக்கடை திறக்கப்பட்டது. இங்கு சுமார் 30-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
வழக்கம்போல் இன்றும் இந்த நகைக்கடையில் ஊழியர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது, நகைக்கடையின் முதல் தளத்தில் உள்ள அலுவலக அறையிலிருந்து திடீரென மின் கசிவு ஏற்பட்டு ஒரு கம்ப்யூட்டர் மற்றும் 10 சேர்களில் தீப்பற்றியது. தீ வேகமாக பரவியதால் கரும்புகை கடை முழுவதும் சூழ்ந்தது. இதனால், பதற்றமடைந்த ஊழியர்கள் அனைவரும் கடையிலிருந்து உடனடியாக வெளியேறினர்.
கடையின் மேல்பகுதியிலும் கரும்புகை வெளியேறியது. இதைப் பார்த்த தீயணைப்பு வீரர்கள் இரு வாகனங்களில் விரைந்து சென்று தீயை அணைத்தனர். அப்போது, கடை முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. பல கோடி மதிப்பிலான நகைகள் கடையில் வைக்கப்பட்டதால் கடைக்குள் வெளி நபர்கள் செல்லாதபடி போலீஸார் மற்றும் ஊழியர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, தீயணைப்புத் துறையில் பயன்படுத்தப்பட்டும் புகை வெளியேற்றும் கருவியை கடையின் வாசல் பகுதியில் வைத்து இயக்க முயன்றபோது அது இயங்கவில்லை. சுமார் அரை மணி நேரம் போராடியும் இயந்திரத்தை இயக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் போராடினர். இதனால், கடையின் உட்புறத்தை சூழ்ந்த கரும்புகை வெளியேற நீண்ட நேரம் ஆனது. இந்த விபத்து குறித்து நகைக்கடை மேலாளர் பால்கண்ணன் அளித்த புகாரின் பேரில் விருதுநகர் மேற்கு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.