கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என இந்த வார டாப் சினிமா தகவல்கள் இதோ!
‘வீர தீர சூரன்’ அப்டேட்!
‘சித்தா’ திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் அருண் குமார் மீது நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது. தற்போது இவர் நடிகர் விக்ரமை வைத்து ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். கடந்த வாரம் நடைபெற்ற ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழாவில் இத்திரைப்படம் குறித்தான அப்டேட் ஒன்றைக் கொடுத்திருந்தார்.
இத்திரைப்படம் குறித்துப் பேசிய அவர், ” இப்போ வரைக்கும் 20 முதல் 30 சதவிகிதம் படப்பிடிப்பு முடிஞ்சிருக்கு. நான் சமூக பொறுப்புள்ள படங்களை இயக்கணும்னு ஆசைப்படுறேன். இந்தப் படத்துல விக்ரம் சார்கிட்ட இருந்து நிறைய விஷயங்கள் கத்துக்கிறேன். இப்பவும் ரொம்பவே எளிமையாக இருக்காரு. ஒரு தாகத்தோட சினிமால ஓடிட்டு இருக்காரு. இந்த படம் ஒரு ஆக்ஷன் த்ரில்லர் எமோஷனல் டிராமா.” என்றார்.
‘இந்தியன் 2’ -வில் மிஸ்ஸான காஜல் !
இந்தியன் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் பிரமாண்டமான முறையில் நடந்து முடிந்தது. நடிகர் கமல்ஹாசனை மேடையில் வரவேற்பதற்கு அவரிம் மகளும் நடிகையுமான ஷ்ருதி ஹாசன் மேடையில் எனர்ஜிடிக் பெர்பாமென்ஸ் ஒன்றைக் கொடுத்திருந்தார். இயக்குநர் ஷங்கரின் மகனான அர்ஜித் ஷங்கரும் ‘கதரல்ஸ்’ பாடலுக்காக நடனமாடி பலரையும் ஆச்சரியப்படுத்தினார். மேலும், இந்த விழாவில் இயக்குநர் ஷங்கரை வரவேற்பதற்கு அவரின் மகளும் நடிகையுமான அதிதி ஷங்கர் மாஸ் பெர்பாமென்ஸ் ஒன்றைக் கொடுத்து இயக்குநர் ஷங்கரை வரவேற்றார்.
இத்திரைப்படத்தில் சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி ஷங்கர் ஆகியோரும் நடித்து வருகின்றனர். நடிகை காஜல் அகர்வாலும் நடித்திருக்கிறார். ஆனால், அவருக்கான காட்சிகள் இந்தியன் திரைப்படத்தின் மூன்றாம் பாகத்தில்தான் இடம்பெற்றிருக்கிறதாம். இரண்டாம் பாகத்தில் அவரின் காட்சிகள் எதுவும் இடம்பெறவில்லையாம்.
அண்ணனிடம் ஆசி பெற்ற பவர் ஸ்டார்!
ஆந்திரா மாநிலத்தில் நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது. இதில் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி 21 தொகுதிகளில் வென்றிருக்கிறது. அதிக தொகுதிகளை வென்ற கட்சிகளில் ஜனசேனா கட்சி இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கிறது. நடிகர் பவன் கல்யாண் ஆந்திராவின் பித்தாபுரம் தொகுதியில் போட்டியிட்டு வென்று சட்டமன்ற உறுப்பினராகியிருக்கிறார். இதற்கு நடிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்யும் தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார்.
இப்படியான வெற்றிக்குப் பிறகு நடிகர் பவன் கல்யாண் அவரின் சகோதரரும் நடிகருமான சிரஞ்சீவியிடம் ஆசி பெற்றார். இதனைத் தொடர்ந்து நடிகர் சிரஞ்சீவின் இல்லத்தில் வெற்றிக்கான கொண்டாட்டங்களும் நடைபெற்றது. இது தொடர்பான காணொளியை தனது சமூக வலைதளப் பக்கத்தில் நடிகர் சிரஞ்சீவி வெளியிட்டிருக்கிறார்.
நாடாளுமன்ற உறுப்பினரின் 100 கோடி பட்ஜெட் திரைப்படம்!
கேரளாவின் திரிச்சூர் தொகுதியில் பா.ஜ.க சார்பாக போட்டியிட்டு வென்று நாடாளுமன்ற உறுப்பினராகியிருக்கிறார், நடிகர் சுரேஷ் கோபி. இதற்கு முன்பு இரண்டு முறை இந்தத் தொகுதியில் நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியிருந்தார். தேர்தலில் வெற்றி பெற்ற பிறகும் தொடர்ந்து நடிக்கப்போவதாக நடிகர் சுரேஷ் கோபி கூறியிருக்கிறார்.
வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ” நான் முதலில் ஒப்பந்தமாகியுள்ள படங்களில் நடிக்கவிருக்கிறேன். மம்மூட்டி தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறேன். மேலும் இரண்டு ப்ராஜெக்ட்கள் கைவசம் உள்ளன. அதில் ஒன்று 100 பட்ஜெட்டில் உருவாகவிருக்கிறது. மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும்போது எப்படி படங்களில் நடித்து வந்தேனோ. அதுபோல இந்த படங்களில் நடிக்க முடியும் என நம்புகிறேன்.” எனப் பேசினார்.
சிம்பு கொடுத்த பிரியாணி விருந்து!
இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் கமல்ஹாசனுடன் நடிகர் சிம்பு நடித்து வருகிறார். நடிகர் சிம்பு சமீபத்தில் ‘தக் லைஃப்’ படக்குழுவினருக்கு பிரியாணி விருந்து வைத்திருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் கசிந்தன.
மலையாள நடிகரின் தமிழ் என்ட்ரி!
கும்பளங்கி நைட்ஸ், ஆர்.டி.எக்ஸ் ஆகிய மலையாள திரைப்படங்களில் நடித்து கோலிவுட்டுக்கும் பரிச்சயமானார் மலையாளா நடிகர் ஷேன் நிகம். தற்போது இவர் தமிழில் அறிமுகமாகும் ‘மெட்ராஸ்காரன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. ரங்கோலி திரைப்படத்தை இயக்கிய வாலி மோகன் தாஸ் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.