நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான அன்றே நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின. ஆனால், இதில் முதலிடம் பெற்ற மாணவர்களில் 8 பேர் ஒரே மையத்தில் தேர்வெழுதியவர்கள் என்றும், பலர் 719, 718 ஆகிய மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறார்கள் என்றும் தெரியவந்திருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது.

நீட் தேர்வில் ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண், ஒரு கேள்விக்கு தவறாக விடை எழுதினால் ஒரு மதிப்பெண் குறைக்கப்படும். அப்படியானால், ஒரு தவறான விடைக்கு 4 மதிப்பெண் மற்றும் அதற்கான நெகட்டிவ் மார்க் 1 என மொத்தம் 5 மதிப்பெண் குறையும். ஒருவேளை கேள்விக்கு விடை தெரியாமல் விட்டுவிட்டால் 4 மதிப்பெண் குறையும். அப்படியென்றால், இரண்டாம் மதிப்பெண் 716-ஆகவும், மூன்றாவது 715-ஆகவும்தான் இருக்க வேண்டும். இவ்வாறிருக்க, நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி நடந்திருப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் வரும் நிலையில் தேசிய தேர்வு முகமையின் ஜெனரல் இயக்குநர் சுபோத் குமார் சிங் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, நீட் தேர்வு முடிவுகள் குறித்து விளக்கமளித்த சுபோத் குமார் சிங், “தேர்வர்களால் சில பிரச்னைகள் எழுப்பப்பட்டிருக்கிறது. இது நாட்டிலேயே மிகப்பெரிய போட்டித் தேர்வு. 4,750 தேர்வு மையங்களில் சுமார் 24 லட்சம் மாணவர்களுக்கு ஒரே ஷிப்டில் தேர்வு நடைபெற்றது. தங்களுக்கு குறைவான நேரம் கிடைத்தாக மாணவர்கள் குற்றம்சாட்டினர். அதற்கு, உயர் நீதிமன்றத்தில் நாங்கள் பதிலளித்திருக்கிறோம். அதோடு, குறைதீர்ப்புக் குழு ஒன்றை அமைத்திருந்தோம். இந்தக் குழு சம்பந்தப்பட்ட தேர்வு மையங்களின் அறிக்கைகள், சிசிடிவி காட்சிகள் உள்ளிட்டவற்றை ஆய்வுசெய்தது.

அதில், சில தேர்வு மையங்களில் நேரம் தவறியதைக் குழு கண்டறிந்தது. அதனால், மாணவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க குழு முடிவு செய்தது. அதன்படி, சில மாணவர்களுக்கு மதிப்பெண்கள் அதிகரிக்கப்பட்டது. அதன் காரணமாக, சிலர் 718, 719 மதிப்பெண்கள் பெற்றனர்,. அனைத்தையும் ஆய்வுசெய்துதான் முடிவுகளை வெளியிட்டோம். 24 லட்சம் மாணவர்களில் 16,000 மாணவர்கள் மட்டுமே இந்தப் பிரச்சினையை எதிர்கொண்டனர். 4,750 மையங்களில் இந்த பிரச்னை 6 மையங்களில் மட்டுமே நிகழ்ந்திருக்கிறது. நாடு முழுவதும் இவ்வாறு நடக்கவில்லை. மேலும் வினாத்தாள்கள் எதுவும் கசியவில்லை” என்று கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88