Nepolean: ”300 ஏக்கர் நிலம்; குதிரைப் பண்ணை அவர் மகாராஜா பசங்க இளவரசர்கள்!” – ரவி ஐபிஎஸ்

அமெரிக்காவில் வசிக்கும் நடிகர் நெப்போலியனையும் அவரது மகன் தனுஷையும் ரவி ஐபிஎஸ்(ஓய்வு) சந்தித்திருப்பது சமூக வலைதளங்களில் பாராட்டுகளையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்திவருகிறது.

நெப்போலியன் மகனிடம் “தனுஷ்… நான் உன்னை பார்க்கிறதுக்காவே அமெரிக்கா வந்தேன். நீ ஒரு கிஃப்டட் சைல்ட். மற்ற சிறப்புக் குழந்தைகளுக்கும் உதாரணமாக இருக்கக்கூடிய ஒரு கிஃப்டட் குழந்தை. இப்படியொரு, அறிவாளியான; அன்பான மகனைப் பெற்றதற்கு உங்க அப்பா பெருமைப்படுறார். தன்னோட மகனுக்கு நேர்ந்ததுபோல் இனி பிறக்கும் குழந்தைகளுக்கு ஆகிவிடக்கூடாது என்பதற்காக மருத்துவமனையே கட்டிக்கொடுத்திருக்கார்” என காவல்துறை முன்னாள் ஏ.டி.ஜி.பி ரவி ஐபிஎஸ் (ஓய்வு) பேசும் வீடியோ வைரல் ஆகி வருகிறது. இந்த நிலையில், அமெரிக்காவில் இருக்கும் ரவி ஐபிஎஸ்ஸை தொடர்புகொண்டு பேசினேன்.

நடிகர் நெப்போலியனுடன் ரவி ஐபிஎஸ்

“நடிகர் நெப்போலியன் எனக்கு நீண்டகால நண்பர். நலம் விரும்பி. அவரோட ரெண்டு பசங்களுமே என்கூட ரொம்ப ஃப்ரெண்ட்லி. தமிழ்நாட்ல இருக்கும்போது அடிக்கடி மீட் பண்ணிக்குவோம். ஆனா, தன் மகனோட உடல்நலத்துக்காகவே அமெரிக்காவுக்கு போய் செட்டில் ஆனார் நெப்போலியன். அதுக்கப்புறம், அவரை நான் மீட் பண்ணவே இல்ல. அவரையும் அவரோட பசங்களையும் மீட் பண்ணனும்னு நினைச்சுக்கிட்டே இருந்தேன். குறிப்பா, தனுஷை மீட் பண்ணனும்னு ரொம்பவே எக்ஸைட்மெண்டா இருந்தேன்.

என்னோட தங்கச்சி வளர்மதியும் அமெரிக்காவுல இருக்காங்க. அதனால, அவங்களைப் பார்த்துட்டு அப்படியே நெப்போலியனையும் தனுஷையும் பார்க்கப்போனேன். நான், அங்க வந்ததுல நெப்போலியனுக்கும் அவரோட குடும்பத்தினருக்கும் அப்படியொரு மகிழ்ச்சி. குறிப்பா, தனுஷ் ரொம்ப ஹேப்பி ஆகிட்டார். ஏன்னா, என்னோட பிறந்தநாளும் தனுஷோட பிறந்தநாளும் ஜூலை 27-ஆம் தேதிதான். ஒரே நாளில் பர்த்டே வருதுன்னு சொல்லி, இந்தியாவுல இருக்கும்போதே கிஃப்ட் எல்லாம் கொடுத்து சந்தோஷப்பட்டுக்குவோம்.

தனுஷ் ரொம்ப அறிவார்ந்த பையன்ங்குறதாலேயே எனக்கு ரொம்பப் பிடிக்கும். கை, கால் எல்லாம் அசைக்கக்கூட முடியாது. ஆனா, அந்த சூழலிலும் புத்தகங்கள் வாசிக்கக்கூடியவர். கம்ப்யூட்டர்ல்லாம் ஆபரேட் பண்ணுவார். அவங்க அப்பாவோட கம்பெனிக்கு அசிஸ்ட் பண்ணுவார். அப்படியொரு, இன்டெலிஜெண்டான பையன். நான், ஒரு புத்தகம் பரிசா கொடுத்தேன். தனுஷுக்கு ரொம்ப ஹேப்பி.

நெப்போலியன் குடும்பத்துடன் ரவி ஐபிஎஸ்

ஒருநாள் முழுக்க நெப்போலியன் வீட்டுல இருந்தேன். நெப்போலியன் மாதிரி ஒரு பேரன்புமிக்க அப்பாவை பார்க்கவே முடியாது. மனசால் மிக உயர்ந்த மனிதர். எத்தனையோ பேரை பார்த்திருக்கேன் அவர் மாதிரி யாரும் கிடையாது. கள்ளம் கபடம் இல்லாத மனிதர். நட்புக்கு முதலிடம் கொடுப்பார். அவருடைய மனைவிக்கு ஒரு நல்ல கணவர். பிள்ளைகளுக்கு உண்மையான அப்பா அப்படின்னு அவரைப்பற்றி பாராட்டிக்கிட்டே போகலாம்.

தனுஷுக்கு விமானத்துல போனா ஆக்சிஜன் கம்மியாகிடும்ங்குறதால எங்க போனாலும் கப்பல் வழியாத்தான் கூட்டிக்கிட்டு போறாரு. நைட்டு தூங்கும்போது தனுஷ் பக்கத்துலதான் படுத்துக்குவாரு. தனுஷை கண்ணும் கருத்துமா பார்த்துக்குவாரு. இப்படியெல்லாம்கூட இருக்கமுடியுமான்னு ஆச்சர்யப்படுத்துறாரு. அவருடைய அன்பிலேயே மேலும் அறிவார்ந்த பையனா மாறிக்கிட்டிருக்கான்.

நெப்போலியன்

அவருடைய வீடு ஒன்றரை ஏக்கரில் இருக்கு. வீட்டு உள்ளேயே டென்னிஸ் கோர்ட், ஃபுட் பால் கோர்ட், ஷட்டில் கோர்ட்ன்னு தனித் தனியா இருக்கு. அவர்கூட விளையாண்டுக்கிட்டிருந்தேன். அதேமாதிரி, விருந்தோம்பலிலும் அவரை அடிச்சுக்கமுடியாது. அவரும் அவரது மனைவியும் கனிவா கவனிச்சுக்கிட்டாங்க.

அமெரிக்காவுல எங்கேயுமே வாழை இலையில சாப்பாடு போடமாட்டாங்க. ஆனா, நெப்போலியன் நான் போனதும் எனக்கு வாழை இலையில சாப்பாடு போட்டாரு. அப்படியே நெகிழ்ந்து போயிட்டேன். அதுவும் அவரோட மனைவி நான் சாப்பிட்டதை அவங்க கையால எடுத்துட்டு போயி போட்டாங்க. நான் எவ்வளவோ முயற்சி பண்ணினேன். ஆனாலும் அன்பால அப்படி பண்ணிட்டாங்க. என் தங்கச்சி கணவர் கனகராஜ் சைன்டிஸ்ட்டா இருக்காரு. அவர் சாப்பிட்ட தட்டை அவர்தான் கழுவுவார். நானும் அப்படித்தான். நான் சாப்பிட்ட தட்டை தங்கை வீட்டில் நானே கழுவி வெச்சேன். அப்படிப்பட்ட என்னை நெகிழவெச்சுட்டாங்க.

குடும்பத்துடன் நெப்போலியன்

நெப்போலியன் வீட்டுல சாப்பாடு செஞ்சுக்கிட்டே இருக்காங்க. அவர் வீட்டுக்கு 25 பேருக்கு மேல வந்து சாப்பிட்டுக்கிட்டே இருக்காங்க. இங்க 300 ஏக்கர் நிலம் வெச்சுக்கிட்டு விவசாயம் பன்றாரு. அதுல, எல்லா வகையான காய்கறிகள், பழ வகைகள் எல்லாமே இருக்கு. தனியா குதிரை பண்ணையும் வெச்சிருக்காரு.

நெப்போலியன்னா ராஜா. இவரோ மகாராஜாவா வாழ்ந்துக்கிட்டிருக்காரு. மகன்களை இளவரசரா வளர்த்துக்கிட்டிருக்காரு. அவரோட கம்பெனியில 70 க்குமேற்பட்டவர்கள் ஒர்க் பன்றாங்க. தன்னோட குடும்பம் போலத்தான் அவங்களையும் நடத்துறாரு. எல்லாரும் இங்க வந்து சாப்பிடுறாங்க. 70 பேர்ல 20 பேர் தமிழர்கள். மற்றவர்கள் கேரளா, ஆந்திரான்னு தென் மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பைக் கொடுத்திருக்காரு. அதுமட்டுமில்ல, ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை, நமஸ்தே ரெஸ்ட்டாரண்ட்னு நம்ம இந்தியர்கள் திறக்குற கடைகளையும் சீஃப் கெஸ்ட்டா போய் திறந்து வெச்சு வாழ்த்துறாரு.

நெப்போலியன் வீட்டில்

நேத்து அவரோட மனைவி அமெரிக்காவிலிருந்து சென்னை கிளம்பினப்போ எல்லாரும் ஓடிவந்து வழியனுப்பினதை பார்க்கும்போதே ரொம்ப நெகிழ்ச்சியா இருந்துச்சு. இவங்க ரெண்டு பேரும் எந்தளவுக்கு அன்பா நடத்தினாங்கன்னா, பணியாளர்கள் இவ்ளோ பாசத்தைக் கொட்டுவாங்க. எனக்கு எல்லாமே பிரமிப்பா இருந்துச்சு” என்கிறார் உணர்வுப்பூர்வமாக.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.