‘ஈ நாடு’ ஊடக நிறுவனரும், தொழிலதிபருமானவர் ராமோஜி ராவ். இன்று பிரபலமாக இருக்கும் ஹைதராபாத்தில் உள்ள பிரம்மாண்ட ‘ராமோஜி ஃபிலிம் சிட்டி’யை நிறுவியவரும் இவர்தான்.
இந்த ராமோஜி ஃபில்ம் சிட்டியில்தான் பாகுபலி, புஷ்பா உள்பட பல்வேறு பிரபல திரைப்படங்கள் படமாக்கப்பட்டுள்ளது. 87 வயதாகும் ராமோஜி ராவ், கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால், ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார்.
இந்நிலையில், நேற்றிரவு அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்தது. இந்நிலையில் உடல்நலக் குறைவாலும், வயோதிகத்தின் காரணமாலும் இன்று அதிகாலை 4.50 மணியளவில் உயிரிழந்தார். ராமோஜி ராவ் மறைவுக்கு திரை, அரசியல் பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடி சந்திரபாபு நாயுடு உருக்கத்துடன் ராமோஜி மறைவுக்குத் தங்கள் X தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளனர். ராமோஜி அவர்களின் பூத உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார்.
ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள பெடபருபுடியில் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த ராமோஜி, தனது வாழ்வை முதலில் ஒரு பத்திரிகையாளராக ஆரம்பித்தவர். ஊடகத்துறையின் மீது காதல் கொண்ட இவர் ‘ஈ நாடு’ என்ற ஊடகத்தை நிறுவினார். பிறகு, திரைப்பட விநியோகத்தில் ஆர்வம் காட்டத் தொடங்கி, தெலுங்குத் திரையுலகில் கவனிக்கத்தக்க இடத்தைப் பிடித்தார்.
ஹோட்டல் டால்பின் குரூப் உள்ளிட்ட பல முன்னனி நிறுவனங்களையும் நிர்வகித்து வந்தார். தெலுங்கு ஊடகத் துறையில் ஜாம்பவானாகக் கொடிக்கட்டி பறந்த இவர், 1996ம் ஆண்டு ஹைதராபாத்தில் பிரமாண்டமான ‘ராமோஜி ஃபிலிம் சிட்டி’யை நிறுவினர். இந்தியாவின் மிகப்பெரிய ஃபிலிம் சிட்டியாக இது இன்று பிரபலமாகியுள்ளது. இப்படி ஊடகத்துறையிலும், திரைத்துறையிலும் கொடி கட்டிப் பறந்த ராமோஜி தனது 87வது வயதில் காலமாகியுள்ளார்.