சவூதி அரசாங்கம் வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை முஸ்லிம் முப்படை வீரர்களுக்கு இலவச ஹஜ் வாய்ப்புகளை வழங்கியுள்ளது

வரலாற்றில் முதல் தடவையாக, இந்த ஆண்டு (2024) ஹஜ் கடமைகளை மேற்கொள்ள இலங்கை முப்படையைச் சேர்ந்த முஸ்லிம் உறுப்பினர்களுக்கு வாய்ப்பை சவூதி அரசாங்கம் வழங்கியுள்ளது.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன், சவூதி அரேபியாவின் தூதுவர் அதிமேதகு காலித் ஹமூத் அல்கஹ்தானிக்கு விடுத்த வேண்டுகோளுக்கமைய இந்த அறிய சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சரின் வேண்டுகோளுக்கு இணங்க, சவூதி அரேபிய தூதுவர் சவூதி அரசாங்கத்திடம் இருந்து அனுசரணை மற்றும் சிறப்பு கோட்டாக்களை பெறுவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்ததை தொடர்ந்து முதன்முறையாக முஸ்லிம் முப்படை வீரர்கள் ஐவருக்கு சிறப்பு கோட்டாக்கள் இந்த ஆண்டு வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தென்னகோன் கடந்த வெள்ளி (ஜூன் 07) சவூதி அரேபிய தூதுவர் அல்கஹ்தானியை கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்துடன், முப்படை முஸ்லிம் உறுப்பினர்களுக்கு இந்த வாய்ப்பை வழங்கியதற்காக சவூதி தூதுவருக்கும் விசேடமாக சவூதி அரசாங்கத்திற்கும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் நன்றி தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் தென்னக்கோன் இந்தக் கோரிக்கையை முன்வைத்தமைக்கு நன்றி தெரிவித்த சவூதி அரேபிய தூதுவர், எதிர்வரும் ஆண்டுகளில் பாதுகாப்புப் துறை பணியாளர்களுக்கான ஒதுக்கீட்டை மேலும் அதிகரிப்பதில் தனது தனிப்பட்ட கவனத்தை செலுத்துவதாக தெரிவித்தார்.

இதற்கு மேலதிகமாக, எதிர்காலத்தில் இலங்கை முஸ்லிம் பாதுகாப்புப் படையினருக்கும் ‘உம்ரா’ புனிதப் பயணத்தை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்தப்படும் என்றும் சவூதி தூதுவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கையிலுள்ள அனைத்து சமூகங்களுக்கும் உதவுவதற்கு சவூதி அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும், இது தொடர்பில் இந்நாட்டு அதிகாரிகளுடன் நெருக்கமாகச் செயற்பட எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

இலங்கை ஹஜ் குழு உறுப்பினர் மில்பர் கபூர் மற்றும் ஹஜ் யாத்திரை மேட்கொள்ள தெரிவுசெய்யப்பட்டுள்ள பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் இராஜாங்க அமைச்சருடன் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.