சென்னையில் ‘காலம் உள்ளவரை கலைஞர்’ கண்காட்சி: முதல்வர் ஸ்டாலின், மனைவி துர்காவுடன் பார்வை

சென்னை: கருணாநிதி நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு, ராஜா அண்ணாமலை மன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள “காலம் உள்ளவரை கலைஞர்” நவீன கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்காவுடன் சென்று பார்வையிட்டார்.

மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஏற்பாட்டில், ராஜா அண்ணாமலை மன்றத்தில், முதன்முறையாக மாபெரும் பிரம்மாண்ட மெய்நிகர் அரங்கம், கருணாநிதியை மீண்டும் நேரில் சந்திக்கும் ஆச்சர்ய அனுபவத்தை தூண்டும் வகையில் வரலாற்று சிறப்புமிக்க “காலம் உள்ளவரை கலைஞர்” நவீன கண்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த அரங்கத்தில், கருணாநிதியின் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகளான திருவாரூரில் ஆரம்பித்து சென்னை மெரினா கடற்கரை நினைவிடம் வரை என நூற்றுக்கும் மேற்பட்ட அரிய வகை புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

இக்கண்காட்சி அரங்குக்குள் உள்ளே நுழைந்ததும் முப்பரிமாண தொழில்நுட்பத்துடன் கூடிய 40 வயது தோற்றத்துடன் கருணாநிதி நேரடியாக மக்களுடன் தமிழை போற்றி பேசும் கவிதை காவியம் இடம்பெற்றுள்ளது. “வாழும் வரலாறு முத்தமிழறிஞர் கலைஞரின் கதைப்பாடல்” காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

மற்றொரு அரங்கில் கருணாநிதி எப்போதும் அவர் விரும்பும் முரசொலி அலுவலகத்தில் உரையாடுவதுபோல் ஒரு செல்ஃபி பாயிண்ட் மெழுகு சிலை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு எடுக்கப்படும் செல்ஃபி புகைப்படங்கள் குறுஞ்செய்தியாக பார்வையாளர்களுக்கு உடனுக்குடன் அனுப்பி வைக்கப்படுகிறது.

மேலும், ஒரு அரங்கில் மெய்நிகர் (VR effects) தொழில்நுட்பத்துடன் 3D கேமராவில் பதிவு செய்த கருணாநிதியின் வரலாற்று காவியமும் கருணாநிதி வழியில் தொடரும் திமுக அரசை மக்கள் போற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியகத்தை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின், மனைவி துர்கா ஸ்டாலினுடன் பார்வையிட்டார்.

அப்போது, அமைச்சர் சேகர்பாபு, திமுக எம்பி., ஆ.ராசா மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். கண்காட்சியகத்தை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோரை பாராட்டினார். முன்னதாக, இந்த கண்காட்சியை அமைச்சர்கள், எம்பிக்கள், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோர் வந்து பார்த்து சென்றது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.