ராய்ப்பூர்: சத்தீஸ்கரின் பல்ராம்பூரை சேர்ந்த பாஜக ஆதரவாளர் துர்கேஷ் பாண்டே (30). இவர் கடந்த செவ்வாய்க்கிழமை மக்களவைத் தேர்தல் முடிவுகளை டி.வி.யில் மிகுந்த ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தார். தொடக்கத்தில் காங்கிரஸ் முன்னிலை வகிப்பதை கண்ட துர்கேஷ் பாண்டே மன உளைச்சலுக்கு ஆளானார். இதையடுத்து அருகில் உள்ள காளி கோயிலுக்குச் சென்று பாஜக வெற்றி பெற வேண்டிக்கொண்டார்.
சில மணி நேரத்துக்குப் பிறகு பாஜக தலைமையிலான என்டிஏ முன்னிலை பெறுவதை கண்ட துர்கேஷ் பாண்டே மீண்டும் காளி கோயிலுக்குச் சென்றார். அங்கு திடீரென தனது இடது கை விரலை வெட்டி காளி தேவிக்கு காணிக்கையாக செலுத்தினார்.
ரத்தம் வெளியேறியதால் அவரது குடும்பத்தினர் அருகில் சமரி என்ற இடத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பாண்டேவுக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். எனினும் விரலை மீண்டும் இணைக்க முடியவில்லை.
இதுகுறித்து துர்கேஷ் பாண்டே கூறும்போது, “தொடக்கத்தில் காங்கிரஸ் வெற்றி பெறுவதை கண்டு மன உளைச்சலுக்கு ஆளானேன். உடனே கோயிலுக்கு சென்றுபாஜக வெற்றி பெற்றால் விரலை காணிக்கையாக செலுத்துவதாக வேண்டிக் கொண்டேன். மத்தியில்பாஜக இப்போது ஆட்சி அமைக்கிறது. எனினும் 400 இடங்களுக்கு மேல் என்டிஏ பெற்றிருந்தால் நான் இன்னும் மகிழ்ச்சி அடைந்திருப்பேன்” என்றார்.