கோவை: மக்களவைத் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி கூறும் வகையில் கோவையில் முப்பெரும் விழா நடத்தப்படவுள்ளதாக, அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
கோவை, செட்டிபாளையம் ‘எல்என்டி’ புறவழிச்சாலை அருகேயுள்ள பகுதியில் திமுக சார்பில் முப்பெரும் விழா ஜூன் 14-ம் தேதி நடைபெறுகிறது. விழா நடைபெறும் இடத்தை தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் இன்று ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு தமிழக மக்கள் அமோக வெற்றியை வழங்கியுள்ளனர். இதை கொண்டாடும் வகையில் முப்பெரும் விழா நடத்த முதல்வர் அனுமதி அளித்துள்ளார். மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த விழா நடந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கட்சி சார்பில் வெற்றி பெற திட்டம் வகுத்து வழி நடத்திய கட்சியினருக்காகவும் விழாவை கோவையில் நடத்த கேட்டுக்கொண்டதால் விழா இங்கு நடைபெற உள்ளது.
வரும் ஜூன் 14-ம் தேதி மாலை கோவை, செட்டிபாளையம் எல்என்டி புறவழிச்சாலை அருகேயுள்ள பகுதியில் நடைபெறும் இவ்விழாவில் தேர்தலில் வெற்றி பெற்ற 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும், திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக பங்கேற்க உள்ளனர். விழா நடைபெறும் பகுதியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் மாற்று இடம் ஒன்றையும் பார்த்து வைத்து உள்ளோம். இந்த இடத்துக்கு சமமான இடமாக அந்த இடமும் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக், கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன், கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி, உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.