ஐம்பதில் மட்டுமல்ல, எண்பதிலும் தாம்பத்திய உறவின்மீது ஆசை வரும். அது இருபாலருக்கும் இயல்பான ஒன்றும்கூட. மனமும் உடலும் ஒத்துழைத்தால், வாழ்வின் கடைசி நிமிடம் வரை காதலும் காமமும் கரை புரண்டோட வாழலாம். அதே நேரம், ‘வயசானாலும் தாம்பத்திய உறவு வெச்சுக்கிறதுக்கு நானும் மனைவியும் விருப்பமா இருக்கோம். ஆனா, என்னோட ஆணுறுப்பு வலுவா இல்ல. என்ன செய்வது’ என்பது சிலருடைய பிரச்னையாக இருக்கிறது. அதற்கான தீர்வைச் சொல்கிறார் மூத்த பாலியல் மருத்துவர் நாராயண ரெட்டி!
“வயதாகி விட்டால் சிலருக்கு விறைப்புத்தன்மையில் பிரச்னை வரும். அதைத்தான் `ஆணுறுப்பு வலுவா இல்ல’ என்று குறிப்பிடுவார்கள். ஆணுறுப்பில் ரத்த ஓட்டம் சரியாக இருந்தால்தான், உறவின்போது உறுப்பு பெரிதாகும்; வலுவாகவும் இருக்கும். இந்தப் பிரச்னைக்கு வயது முக்கியமான காரணம். மனித உடலில் இருக்கும் ரத்தக்குழாய்கள் சிறுவயதில் மென்மையாக இருக்கும். வயது செல்லச் செல்ல ரத்தக்குழாய்கள் தடிமனாகி விடும். இதனால், ரத்தக்குழாய்களுக்குள் செல்கிற ரத்த ஓட்டத்தின் வேகம் குறைய ஆரம்பிக்கும். ஆணுறுப்பிலும் இது நிகழும். இதன் காரணமாகவே உறுப்பில் விறைப்புத்தன்மை குறைய ஆரம்பிக்கும்.
நீரிழிவு, ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்ற வாழ்வியல் நோய்கள் இருந்தாலோ அல்லது புகைப்பழக்கம் இருந்தாலோ, ரத்தக்குழாய்கள் சேதமடைந்திருக்கும். இதனால் ஆணுறுப்பினுள் தேவையான அளவுக்கு ரத்த ஓட்டம் இல்லாமல் போயிருக்கலாம். இதன் காரணமாகவும் விறைப்புத்தன்மை பாதிக்கப்படும். வாழ்வியல் நோய்களைக் கட்டுக்குள் வைத்திருப்பதுதான் இதற்கான தீர்வு.
50 வயதுக்கு மேல் ஆண் ஹார்மோனான டெஸ்ட்டோஸ்டீரான் சுரக்கும் அளவு படிப்படியாகக் குறைந்து கொண்டே வரும். விறைப்பின்மைக்கு இதுவும் முக்கியமான காரணம். ஆண் ஹார்மோன் கொண்ட மாத்திரை, ஊசி மருந்து, ஆயின்மென்ட் ஆகியவற்றின் வழியே இந்தப் பிரச்னையைச் சரி செய்யலாம்.
இருபதுகளில் இருக்கிற ஆண்களுக்குப் பார்ப்பதன் மூலமே தூண்டுதல் கிடைத்துவிடும். முப்பது மற்றும் நாற்பதுகளில் இருக்கிற ஆண்களுக்குக் கூடுதலாகத் தூண்டுதலும் தேவைப்படும். அறுபதுகளில் இருக்கிற ஆண்களுக்கு உடல்ரீதியான தூண்டுதல் தீவிரமாகத் தேவைப்படும். அப்போதுதான் உறுப்புக்கு ரத்த ஓட்டம் செல்லும்; விறைப்புத்தன்மையிலும் பிரச்னை இருக்காது’’ என்கிறார் டாக்டர் நாராயண ரெட்டி.