விஜய் சேதுபதி நடிப்பில் இந்த வாரம் வெளியாகவுள்ள திரைப்படம் `மகாராஜா’. `குரங்கு பொம்மை’ படத்தின் இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.
விஜய் சேதுபதி, அபிராமி, மம்தா மோகன்தாஸ், ‘பாய்ஸ்’ மணிகண்டன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படம் வரும் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய விஜய் சேதுபதி,

“நித்திலன் சுவாமிநாதன் இயக்கியிருக்கும் இந்தத் திரைப்படம் என்னுடைய 50-வது திரைப்படமாக அமைந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. 50 படங்களில் நடித்துவிட்டேன். என்னுடைய திரைப் பயணத்தில் வெற்றி தோல்வி அனைத்தையும் சமமாகவே எடுத்துக் கொள்கிறேன். விமர்சனங்களையும் அவ்வாறே பார்க்கிறேன். நான் நடித்த பல படங்களுக்கு முழுமையான சம்பளம் இன்னும் வரவில்லை என்பது உங்களுக்குத் தெரியாது. செக் பவுன்ஸ் ஆகும், சம்பளம் பாக்கி வைக்கப்படும்.
இருந்தாலும் தயாரிப்பாளர்கள் படம் எடுக்க வருவதை நான் ஆதரிக்கிறேன். அதற்காகவே திரைப்படங்களில் நடிக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து ‘கடைசி விவசாயி’ திரைப்படத்தில் ஆன்மீகம் தொடர்பான கதாபாத்திரத்தில் நடித்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்,

“ஆன்மிகத்தை உணர்வது மிகவும் கடினம். அந்த நிலைக்கு நான் இன்னும் வரவில்லை. ஆனால் அந்தத் திரைப்படத்தில் நடிப்பதற்காக நிறைய கஷ்டப்பட்டேன்” என்று தெரிவித்திருக்கிறார்.