மோடிக்கு வாழ்த்து கூறாதது ஏன்? பாகிஸ்தான் புது விளக்கம்

இஸ்லாமாபாத்,

நாடாளுமன்றதேர்தல் கடந்த ஏப்ரல் 19-ந்தேதி முதல் ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடந்து முடிந்தது.கடந்த 4-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடந்தது. அதில், பா.ஜனதா உள்பட எந்த கட்சியும் தனித்து ஆட்சி அமைக்க தேவையான 272 தொகுதிகளில் வெற்றிபெறவில்லை. இருப்பினும், பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க பா.ஜனதா முடிவு செய்தது.மறுநாள் (5-ந்தேதி) தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் கூட்டம் நடந்தது.

அதில், பிரதமர் மோடி 3-வது முறையாக பிரதமர் ஆவதற்கு கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக மோடி தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாளை பிரதமராக பதவியேற்க இருக்கும் மோடிக்கு உலக தலைவர்கள் பலரும் வாழ்த்து கூறியுள்ளனர்.

ஆனால் பாகிஸ்தான் இதுவரை வாழ்த்து கூறவில்லை. பிரதமர் ஆக மீண்டும் பதவியேற்க உள்ள நரேந்திர மோடிக்கு வாழ்த்து சொல்லாதது ஏன் என்பதற்கு பாகிஸ்தான் விளக்கம் அளித்து உள்ளது.இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மும்தாஜ் ஜாக்ராவிடா இது தொடர்பாக கூறியதாவது:

இந்திய மக்களுக்கு தங்களது தலைவரை தேர்வு செய்யும் உரிமை உள்ளது. இந்தியாவின் தேர்தல் நடைமுறைகள் குறித்து எந்த கருத்தும் கூற முடியாது. புதிய அரசு பதவியேற்காததால் இந்திய பிரதமருக்கு வாழ்த்து தெரிவிப்பது குறித்து பேசுவது முதிர்ச்சியற்றது. இந்தியா உள்ளிட்ட அனைத்து நட்பு நாடுகளுடன் நட்பையே பாகிஸ்தான் விரும்புகிறது. காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகள் குறித்தும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண விரும்புகிறது” என்றார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.