தேனியில் காடுகளுக்கு நடுவே இருக்கும் நியூட்ரினோ திட்டப்பகுதியில் ஒரு பெருவெடிப்பு சம்பவம் நடக்கிறது. அங்கே சுற்றுச்சூழல் ஆர்வலராக இருக்கும் அக்னி (வசந்த ரவி) தென்பட, சந்தேகத்தின் பெயரில் அவரை விசாரணைக்கு அழைத்துச் செல்கிறது தேசியப் பாதுகாப்புப் படை. விசாரணையில் அவர் சூப்பர் ஹியூமன் குறித்த காணொலிகளைத் தயாரிக்கும் யூடியூபர் எனவும், அப்படி ஒரு மனிதனை இங்கே தேடி வந்ததாகவும் கூறுகிறார். மறுமுனையில் தங்கள் அதிகாரத்தை வைத்து மக்களைச் சுரண்டும் டார்க் சொசைட்டியின் தலைவரான டி.கேவும் (ராஜிவ் மேனன்) அவரின் சகாக்களும் அதே சூப்பர் ஹியூமனைத் தேடுகிறார்கள். ஒரு பக்கம் அக்னியின் விசாரணை, மறுபக்கம் டார்க் சொசைட்டியின் தேடுதல், அவர்களின் பின்னணி எனப் பல அடுக்குகளில் கதை சொல்கிறது இந்த ‘வெப்பன்’.
அக்னியாக வசந்த் ரவி, ஆனால் நடிப்பில் மட்டும் பச்சைத் தண்ணீர் போலவே ஓடுகிறார். வசன உச்சரிப்பு, கோபத்தைக் கடத்தும் காட்சி என எதுவும் எடுபடவில்லை. மித்ரனாக வரும் சத்யராஜுக்குப் பெரிதாக வசனமே இல்லை. யானைகளின் மீது பாசம், அந்தரத்தில் பறப்பது, முகம் துடைக்கத் துண்டு வேண்டுமென்றால் கூட சூப்பர் பவரைப் பயன்படுத்திடுவது என “யாருங்க நீங்க பயங்கரமான ஆளா இருக்கீங்களே?” எனக் கேட்கும் அளவுக்குச் சக்தி கொண்டவராக வலம் வருகிறார். ஆனால் அதன் மூலம் உணர்வுபூர்வமாக எதையுமே பேசாமல் “நல்லா வித்தை காட்டுகிற மேன் நீ” என்று கமென்ட் சொல்லும் ரகத்தில் முடிகின்றன காட்சிகள். அனுபவமிக்க ஒரு நடிகரை இப்படி வீணடித்திருப்பது ஏனோ இயக்குநரே?
அடுத்து உடைக்கப்பட்ட பர்னிச்சராக, ராஜிவ் மேனன் டார்க் சொசைட்டி (இல்லுமினாட்டி கணக்காக ஒரு குரூப்) தலைவராக மிரட்ட முயல்கிறார், ஆனால் நமக்குத்தான் பயம் வரவில்லை. தான்யா ஹோப் நடிப்பில் ஹோப்பில்லை. இதுபோக இயக்குநர் வேலு பிரபாகரன், ஒரேயொரு வசனம் பேச பரத்வாஜ் ரங்கன், மைம் கோபி, மாயா, கனிகா, யாஷிகா ஆனந்த் என எக்கச்சக்க கதாபாத்திரங்கள். ஆனால் அனைவருமே கண்ணை மூடி கண்ணைத் திறந்தால் காணாமல் போய்விடுகிறார்கள். (இல்ல, புரியல!)
ஹிட்லரின் சூப்பர் ஹீரோ சூப்பர் சீரமின் யோசனை கேப்டன் அமெரிக்காவை நினைவுபடுத்துவது போல, ஜிப்ரானின் பின்னணி இசை பல சூப்பர் ஹீரோ படங்களின் இசையை ஞாபகப்படுத்துகிறது. டாப் ஆங்கிள் ஷாட்கள், சண்டைக் காட்சிகள் என ஒளிப்பதிவாளர் பிரபு ராகவ் சற்றே கவனிக்க வைக்கிறார். டிஐ தொழில்நுட்பமும் மெச்சத்தகுந்த வண்ணம் இருக்கிறது.
காட்சிகளில் முடிவில்லாத கட், குழப்பமான நான்-லீனியர் பாணியில் சொதப்பல் எனச் சறுக்கியிருக்கிறார் எடிட்டர் கோபி கிருஷ்ணா. காற்றிலே பறந்து பறந்து சண்டை செய்யும் காட்சிகளில் சண்டை பயிற்சியாளர் சுதீஷ் எக்ஸ்ட்ரா டியூட்டி பார்த்திருக்கிறார், அவ்வளவே!
சூப்பர் பவர் இருக்கா… இருக்கு, ரோபோடிக்ஸ் இருக்கா… இருக்கு, விர்ச்சுவல் ரியாலிட்டி இருக்கா… இருக்கு, கைனடிக் எனர்ஜி, ஆல்ட்டராசோனிக் இருக்கா… இருக்கு என சயின்ஸ் பிக்சன் பிரிவுகள் அனைத்தையும் ஒரே கோணிப் பையில் போட்டு ஹோல்சேலாக எடுத்து வந்திருக்கிறார் இயக்குநர் குகன் சென்னியப்பன். இதுபோதாதென குண்டலினி சக்தி, வேதம் என ஆன்மிகத்திலும் அடிசனல் ஷீட் வாங்கி நம்மைப் பிரமிப்பூட்டும் ஓர் உலகத்தைச் சிருஷ்டிக்க மெனக்கெடல் எடுத்துள்ளார்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக அனைத்து பேப்பர்களையும் ஒன்றிணைக்கும் நூல் என்னும் திரைக்கதையை மட்டும் கட்டாமல் விட்டுவிட்டார். இந்தக் கொத்து பரோட்டா போதாதென பார்வையாளர்களை மாணவர்களாகக் கருதி விவரிப்புகளையும் விளக்கங்களையும் வெறும் வசனங்களாகச் சொல்லி “மீண்டும் பள்ளிக்குப் போகலாம்” மோடிலேயே நகர்கிறது படம்.
படத்தில் ஒரு சில காட்சிகளில் ஸ்டாக் புட்டேஜ் இருக்கலாம், ஆனால் இரண்டு மணி நேரம் ஓடும் படத்தில் கிட்டத்தட்ட அரை மணிநேரத்துக்கு அது மட்டுமே ஓடுகிறது. அதிலும் ஏ.ஐ கிராபிக்ஸ் எல்லாம் அனுபவமற்ற முறையில் கையாளப்பட்டுள்ளன. பேன்டஸி படத்தில் சூப்பர் பவர் இருப்பவர்கள் அசாத்தியமான செயல்களைச் செய்ய முடியும் என்பது நியாயம்தான். ஆனால் பவர் ஏதுமில்லாத சாதாரண அடியாளாகக் காட்டப்படும் ஒருவர் எப்படி ஒரு குட்டி யானையை ஒரே கையால் மூட்டையில் தூக்கி வந்து இழுத்துப் போட முடியும்? (இல்ல, புரியல!) இந்தப் படத்தில் பொருள்கள் மட்டும் அந்தரத்தில் பறக்கவில்லை, லாஜிக்கையும் பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை காற்றில் பறக்கவிட்டிருக்கிறார்கள்.
கதாநாயகியைக் கதாநாயகன் சமாதானம் செய்யும் காட்சியில் “என்ன புரிஞ்சுக்கோ” என்பதை மட்டுமே லூப் மோடில் சொல்லி அவரை ‘புரிஞ்சுக்க’ வைக்கும் காட்சி மீண்டும் “இல்ல, எனக்கு புரியல” ரகம்தான்! சூப்பர் பவர் இருக்கும் இருவர், ஏன் மீண்டும் சாதாரண மனிதர்கள் போலச் சண்டை போட்டுக்கொள்ள வேண்டும், சூப்பர் பவர் இருக்கும் ஒருவர், தன் மொத்த வித்தையை இறக்காமல் ஏன் வெறுமென முஷ்டியை முறுக்கிக் கொண்டு அடியாள்களை அடித்துத் துவைத்து டைம் வேஸ்ட் செய்ய வேண்டும் என்றெல்லாம் எழுகிற கேள்விகளுக்குப் படத்தில் பதில் இல்லை.
கும்பல் கும்பலாக எதிரிகள், ஆளாளுக்கு ஒரு கிளைக்கதை, அதை நேர்கோட்டில் சொல்லாமல் அலைக்கழிக்கும் திரைக்கதை என இந்த `வெப்பன்’, எதிரிகளைச் சுடாமல் நம்மையே தாக்கியிருக்கிறது.