பிள்ளைப்பேறு கிடைக்காமல் சமூகத்திலும், குடும்பங்களிலும் தம்பதியினர் பல பிரச்னைகளை எதிர்கொள்வதுண்டு. திருமணமான மூன்று மாதத்திலேயே `வீட்ல விசேஷம் இல்லையா’ என ஆரம்பிக்கும் கேள்வி பல ஆண்டுகள் வரை தொடர்கிறது.
பிஞ்சு குழந்தையின் வரவை எதிர்நோக்கி தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக கிடையாய் கிடக்கும் பெற்றோர்கள் பலர் உண்டு. இதற்காக சிலர் தங்களது பணத்தை அதிகம் கொட்டித் தீர்ப்பதும் உண்டு. பலரால் அவ்வளவு செலவு செய்ய முடியாத நிலையும் உண்டு.
தனியார் மருத்துவமனைகள் செய்யும் செயற்கை கருத்தரித்தல் சிகிச்சையை அரசே தொடங்கினால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் நீண்ட காலமாக மக்கள் மனதில் இருந்தது.
இதனை நிவர்த்தி செய்யும் வகையில், எழும்பூர் அரசு மருத்துவமனையில் அதிநவீன செயற்கை கருத்தரித்தல் மையத்தை மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திறந்து வைத்தார். ரூ.6.97 கோடி மதிப்பில் செயற்கை கருத்தரிப்பு மையம் கட்டப்பட்டிருக்கிறது.

தனியார் மருத்துவமனையில் இதற்காக ரூ.10 லட்சம் செலவாகும் நிலையில், இங்கு இலசமாக சிகிச்சை அளிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
“கருத்தரிக்காததற்கான காரணம் என்னவென்று கண்டறியப்பட்டு, அதற்கேற்றாற் போல இங்கு சிகிச்சைகள் அளிக்கப்படும். முதற்கட்டமாக 50 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படும் எனவும் இளம் வயதினருக்கு பல்வேறு நிலைகளில் கருத்தரிப்பு சிகிச்சையும், 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வழிவகை செய்யப்படும்” என்று எழும்பூர் அரசு மருத்துவமனையின் தாய் சேய் நல இயக்குநர் கலைவாணி தெரிவித்துள்ளார்.
தற்போது சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு மையம் தொடங்கப்பட்ட நிலையில், அடுத்ததாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் இரண்டாவது கருத்தரிப்பு மையம் தொடங்குவதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.