ஜம்மு காஷ்மீரின் ரியாசியில் உள்ள ஷிவ்கோரிக்கு பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து இன்று மாலை 6.10 மணியளவில் ரஜோரி மாவட்டத்தின் எல்லையான ரியாசி மாவட்டத்தின் பூனி பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, அதை நோக்கி அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கின்றனர். அதனால் அந்தப் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இந்த தாக்குதலில், 10 பேர் கொல்லப்பட்டதாகவும், 33 பேர் காயமடைந்ததாகவும் எஸ்.எஸ்.பி ரியாசி, மோஹிதா சர்மா தெரிவித்திருக்கிறார்.
இந்த தாக்குதல் தொடர்பாக காவல்துறை தரப்பில், “ஓட்டுநர் தாக்கப்பட்டு கட்டுப்பாட்டை இழந்ததால், பேருந்து அருகில் உள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. மீட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டு காவல்துறையும், ராணுவம், துணை ராணுவப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். உள்ளூர் கிராம மக்களின் உதவியுடன், இரவு 8:10 மணியளவில் அனைத்து பயணிகளும் மீட்கப்பட்டிருக்கின்றனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டனர். தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டுபிடிக்க பல நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது.” எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த தாக்குதல் குறித்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, “ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள ஷிவ்கோடி கோவிலில் இருந்து பக்தர்கள் சென்ற பேருந்துமீது பயங்கரவாதிகள் நடத்திய கோழைத்தனமான தாக்குதல் மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த வெட்கக்கேடான சம்பவம் ஜம்மு காஷ்மீரில் கவலைக்கிடமான பாதுகாப்புச் சூழலின் உண்மையைப் பிரதிபலிக்கிறது. குடும்ப உறுப்பினர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று நம்புகிறேன். தீவிரவாதத்திற்கு எதிராக ஒட்டுமொத்த நாடும் ஒன்றுபட்டு நிற்கிறது.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.